அவசரமாக ரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு உதவும் வகையில் செஞ்சிலுவைச் சங்கத்தின் 'eBloodServices App' என்ற செயலியை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று அறிமுகம் செய்துவைத்தார்.
விபத்து, உறுப்புமாற்று அறுவைசிகிச்சை உள்ளிட்ட அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்குச் சிலசமயங்களில் தேவைப்படும் ரத்தம் கிடைக்காததால் பல்வேறு சிக்கல்கள் உருவாகின்றன. இந்நிலையில், நோயாளிகளுக்குத் தேவையான ரத்தத்தைப் பெறுவதற்காகச் செஞ்சிலுவைச் சங்கம் உருவாக்கியுள்ள புதிய செயலி ஒன்றை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று அறிமுகம் செய்துவைத்தார்.
இந்த அறிமுக நிகழ்ச்சியில் பேசிய அவர், "அவசரமாக ரத்தம் தேவைப்படுபவர்கள் இந்தச் செயலியில் தங்களது தேவையைக் குறிப்பிட்டுப் பதிவுசெய்து கொள்ளலாம். இந்தச் செயலி மூலம் அவர்களுக்கு ரத்தம் எங்கிருந்து கிடைக்கும் என்பதை உடனடியாக அறிந்து கொள்ள முடியும். மேலும், ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு 4 யூனிட் ரத்தம் வரை இந்தச் செயலியின் மூலம் பதிவுசெய்து பெற்றுக்கொள்ள முடியும். இந்தியச் செஞ்சிலுவைச் சங்கத்தின் இரத்த வங்கிகள் அவர்களுக்காக 12 மணி நேரம் வரை காத்திருக்கும். தன்னார்வ இரத்த தானம் செய்பவர்கள் இந்தக் காலகட்டத்தில் தொடர்ந்து நன்கொடை அளிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.