உத்தரப் பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் உள்ள எஸ்.எஸ். சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவி அளித்த பாலியல் புகாரில் சின்மயானந்தா கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் எஸ்.எஸ். சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் தனது கல்லூரி நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் இருக்கும் சிலர் தன்னிடம் அத்துமீறியதாகக் குற்றஞ்சாட்டி வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ வெளியான மறுநாள் அந்த மாணவி மாயமானார். தனது மகள் மாயமானதற்கு பின்னால் முன்னாள் மத்திய இணையமைச்சர் சின்மயானந்தா இருப்பதாக, அவரது தந்தை வழக்கு பதிவு செய்தார்.
இந்த நிலையில், அந்த மாணவி ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மீட்கப்பட்டு, பின்னர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அப்போது, சின்மயானந்தா தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், உடல்ரீதியாக துன்புறுத்தியதாகவும் வாக்குமூலம் அளித்தார். மேலும் சின்மயானந்தா தன்னை போல பல சிறுமிகளின் வாழ்க்கையை சீரழித்துள்ளார் எனவும் கூறியுள்ளார். இந்த நிலையில் தற்போது சின்மயானந்தா இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.