இந்திய பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாக நேற்று மாலை பதவியேற்றத்தைத் தொடர்ந்து, பங்குச்சந்தை இன்று காலை உயர்வுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 40,000 புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தைத் தொட்டது. மத்திய அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் இன்று பிற்பகல் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் பங்குச்சந்தை சரிவை சந்தித்தது. இன்று மாலை பங்குச்சந்தை முடியும் போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 111.77 புள்ளிகள் என 0.30 சதவீதம் சரிந்து 39,714.20 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 23.10 புள்ளிகள் என 0.19 சதவீதம் சரிந்து 11,922.80 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.
மும்பை பங்குச்சந்தையைப் பொறுத்த வரையில் ஐ.டி., டெக், எண்ணெய் மற்றும் எரிவாயு, டெலிகாம், ஆற்றல் துறை சார்ந்த பங்குகள் அதிகளவில் வாங்கப்பட்டும், ரியாலிட்டி, நிதி, வங்கி, ஆட்டோமொபைல், மெட்டல், மின்சாரம் கட்டுமானத் துறை சார்ந்த பங்குகள் அதிகளவில் விற்கப்பட்டும் இருந்தன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 0.16 புள்ளிகள் உயர்ந்து 69.74 ரூபாயாகவும் உள்ளது. பங்குச்சந்தையில் நிலவிய இத்தகைய மாற்றத்தால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே மக்களவை தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள், மக்களவை தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாக இருந்திருந்த நிலையில், தேசிய பங்கு சந்தை மற்றும் மும்பை பங்குச்சந்தை இரண்டிலும் புதிய உச்சத்தை தொட்ட நிலையில் தற்போது சரிவை சந்தித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.