கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. சிபிஐ விசாரணை முடிந்த நிலையில் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனாலும் இதே விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிந்திருந்த வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறையில் இருப்பினும் குடும்ப உறுப்பினர்களின் உதவியோடு அவ்வப்போது ட்விட்டரில் தனது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் மகாராஷ்டிரா அரசியல் நிகழ்வுகளை கடுமையாக விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில், "2019 அரசியலமைப்புச் சட்ட நாளில் நவம்பர் 23-ம் தேதி முதல் 26-ம் தேதிக்கு இடையே நடந்த அதிர்ச்சி தரக்கூடிய அரசியலமைப்புச் சட்ட விதிமுறை மீறல்தான் நம்முடைய நினைவில் இருக்கும்.
அதிகாலை 4 மணிக்கு குடியரசுத் தலைவர் அலுவலகத்தை எழுப்பி, மகாராஷ்டிராவில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்கி கையொப்பமிடக் கூறி நீக்கப்பட்டுள்ளது. இது குடியரசுத் தலைவர் அலுவலகத்தின் மீதான ஒரு தாக்குதல். காலை 9 மணி வரை உங்களால் காத்திருக்க முடியாதா?" என பாஜகவை விமர்சித்துள்ளார். அதேபோல சிவசேனா கட்சிக்கு அறிவுரை கூறியுள்ள அவர், "விவசாயிகள் நலன், முதலீடு, வேலைவாய்ப்பு, சமூக நீதி, பெண்கள், குழந்தைகள் நலன் ஆகியவற்றின் மீது அக்கறை செலுத்துங்கள்" என தெரிவித்துள்ளார்.