Skip to main content

அயோத்தி ராமர் கோவிலைச் சுற்றி நிலங்கள் வாங்கியதில் முறைகேடு?; பக்தியை வைத்து விளையாடுகிறார்கள் - பிரியங்கா காந்தி!

Published on 23/12/2021 | Edited on 23/12/2021

 

PRIYANKA GANDHI VADRA

 

அயோத்தி நில வழக்கில் இராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் கடந்த 2019ஆம் ஆண்டு அனுமதியளித்தது. மேலும், இராமர் கோவில் கட்ட அறக்கட்டளை ஏற்படுத்தும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, மத்திய அரசு ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா என்ற அறக்கட்டளையை அமைத்தது.இந்த அறக்கட்டளை கோவிலுக்காக நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட சுமார் 70 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனையொட்டி அயோத்தியில் பலர் இராமர் கோவில் கட்டப்படும் இடத்தை சுற்றி இடம்வாங்க முயற்சித்து வருகின்றனர். கோவிலுக்கு அருகே நிலம் வாங்கினால், அந்த நிலங்களை கையகப்படுத்தும் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையிடம் பெரிய விலைக்கு விற்கலாம் என்ற திட்டத்தோடு நிலம் வாங்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

 

இந்தநிலையில்,இராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதியளித்த பிறகு, எம்.எல்.ஏ.க்கள், மேயர், அயோத்தியா டிவிஷனல் கமிஷனர், வருவாய் அதிகாரிகள், டிஐஜி மற்றும் இவர்களது உறவினர்கள் என சுமார் 15 பேர், கோவிலைச் சுற்றி நிலம் வாங்கியுள்ளதாக ஊடகம் ஒன்று ஆதாரப்பூர்வ செய்தி வெளியிட்டுள்ளது. இதனையொட்டி இந்த நிலங்கள் வாங்கப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், அதிகாரத்தைப் பயன்படுத்தி நிலங்கள் வாங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

 

இதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச அரசு, இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, இந்த நில முறைகேடு குற்றச்சாட்டுகளை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இதுதொடர்பாக கூறியுள்ளதாவது: 2017-ம் ஆண்டு குறிப்பிட்ட நபருக்கு விற்கப்பட்ட நிலத்தை அந்த நபர் இரண்டாகப் பிரித்து விற்றுள்ளார். அந்த நபர் நிலத்தின்  முதல் பகுதியை 8 கோடி ரூபாய்க்கு நேரடியாக ராம் மந்திர் அறக்கட்டளைக்கு விற்றுள்ளார். இரண்டாம் பகுதியை (ராம் மந்திர் அறக்கட்டளைக்கு முதல் பகுதி விற்கப்பட்ட) 19 நிமிடங்களுக்குப் பிறகு ரவி மோகன் திவாரிக்கு என்பவருக்கு ரூ. 2 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளார். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, இந்த ரவிமோகன் திவாரி அந்த ரூ. 2 கோடி நிலத்தை ₹ 18.5 கோடிக்கு ராம் மந்திர் அறக்கட்டளைக்கு விற்கிறார். அடிப்படையில், ரூ.2 கோடிக்கு சற்று அதிகமான விலையுள்ள ஒரு நிலத்திற்கு அறக்கட்டளை 8 கோடி ரூபாயும், 18.5 கோடி ரூபாயும் அளிக்கிறது. இது ஊழல் இன்றி வேறு என்ன?

 

அந்த நிலம் பிரச்சனையில் இருக்கிறது. அந்த விவகாரத்தில் காவல்துறை பதிவு செய்துள்ள வழக்கில், அந்த நிலத்தை விற்கமுடியாது என கூறப்பட்டுள்ளது. இந்த நில ஒப்பந்தங்களில் சாட்சிகள் யார்? ஒருவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உயர்மட்ட உறுப்பினர் - ராமர் கோவில் கமிட்டியில் அறங்காவலராவார். மற்றொருவர் அயோத்தியின் மேயர். நாட்டில் உள்ள ஒவ்வொரு வீடும் ராம் மந்திர் அறக்கட்டளைக்கு ஏதாவது நன்கொடை அளித்துள்ளனர். வீடு வீடாகச் சென்று பிரச்சாரமும் நடத்தப்பட்டது. இது பக்தியை பற்றிய விஷயம், அதை வைத்து விளையாடுகிறார்கள். தலித்துகளின் நிலங்களை வாங்க முடியாது என்ற நிலையில் அவை பறிக்கப்பட்டுள்ளன. குற்றச்சாட்டுகளை விசாரிக்க உத்தரப்பிரதேச அரசு விசாரணை ஆணையத்தை நியமித்துள்ளது. அது வெறும் கண்துடைப்பு. உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும். இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

 

 
 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்” - பிரதமர் மோடி பேச்சு! 

Published on 17/05/2024 | Edited on 17/05/2024
 "They will bulldoze the Ram Temple" - PM Modi's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 13 ஆம் தேதி (13.05.2024) நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து, மே 20ஆம் தேதி நடைபெறும் ஐந்தாம் கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசுகையில், “சமாஜ்வாதியும், காங்கிரஸும் ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள். இதனால் குழந்தை ராமர் கோயிலில் இருந்து மீண்டும் கூடாரத்திற்கே செல்வார். ராமர் கோயிலில் புல்டோசர் ஓட்டுவார்கள். யோகியிடம் இருந்து புல்டோசரை எங்கு இயக்க வேண்டும், எங்கு இயக்கக்கூடாது எனக் கற்றுக்கொள்ள வேண்டும்” எனப் பேசியுள்ளார்.

முன்னதாக உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 2 ஆயிரம் கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“ராமர் கோவிலை இப்படியா கட்டுவது?” - இந்தியா கூட்டணி எம்.பி. பேச்சால் சர்ச்சை!

Published on 07/05/2024 | Edited on 07/05/2024
samajwati party MP Controversy by speech about Ram temple

உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது.

அப்போது நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பின்பு, குழந்தை ராமர் சிலை கண் திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. குழந்தை ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார். இதனையடுத்து கோவில் கருவறை திரைச்சீலை விலக்கப்பட்டு மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் ராமரை வழிபாடு செய்து வருகின்றனர். இந்த நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவரும், எம்.பியுமான ராம் கோபால் யாதவ் ராமர் கோவில் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அது தற்போது சர்ச்சையாகி மாறியுள்ளது. 

நாடு முழுவதும் தற்போது ஒவ்வொரு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டம், இரண்டாம் கட்டத் தேர்தல் முடிந்து இன்று கர்நாடகா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 93 தொகுதிகளில் மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராம் கோபால் யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஏன் ராமர் கோயிலுக்குச் செல்லவில்லை என்று கேள்வி எழுப்பினர்.

samajwati party MP Controversy by speech about Ram temple

அதற்கு பதிலளித்த ராம் கோபால் யாதவ், “அந்தக் கோவில் பயனற்றது. கோவில்கள் இப்படியா கட்டப்படுகிறது?. பழைய கோவில்களைப் பாருங்கள்..  அவர்கள் யாரும், தெற்கில் இருந்து வடக்கு வரை கட்டவில்லை. கோவிலின் வரைபடம் பொறுத்தமாக இல்லை. வாஸ்து படி குறிக்கும் அளவுக்கு இல்லை” என்று கூறினார்.

இவருடைய கருத்துக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “யாதவின் அறிக்கை சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் மற்றும் அவர்களின் இந்தியா கூட்டணியின் யதார்த்தத்தை காட்டுகிறது. இந்த மக்கள் வாக்கு வங்கிக்காக இந்தியாவின் நம்பிக்கையுடன் விளையாடுவது மட்டுமல்லாமல், பகவான் ஸ்ரீராமரின் தெய்வீக அதிகாரத்திற்கும் சவால் விடுகிறார்கள். தெய்வீக அதிகாரத்திற்கு சவால் விடும் எவருக்கும் துரதிர்ஷ்டம் ஏற்பட்டது என்பதற்கு வரலாறு சாட்சி. 

samajwati party MP Controversy by speech about Ram temple

ராம் கோபால் யாதவின் அறிக்கை கோடிக்கணக்கான ராம பக்தர்களின் சனாதன நம்பிக்கையை அவமதிக்கும் செயலாகும். ராமர் கோவிலுக்கு தங்கள் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர்களின் நம்பிக்கை தாக்கப்படுகிறது. இதை இந்திய சமூகம் ஏற்றுக்கொள்ளவே முடியாது. திருப்திப்படுத்தும் கொள்கையைப் பின்பற்றி வாக்கு வங்கியைக் காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களின் உண்மைத்தன்மை இத்தகைய அறிக்கைகளில் இருந்து தெளிவாகத் தெரிகிறது” என்று கூறினார்.