
ஜார்க்கண்ட் மாநில முதல்வராக பெரும் எதிர்பார்ப்புடன் ஆட்சியில் அமர்ந்தவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன். முக்தி மோர்ச்சா கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து செயல்படுகிறது. இந்நிலையில், முதல்வர் ஹேமந்த் சோரன் தற்போது சிக்கலில் சிக்கித் தவிக்கிறார். இவர் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனுக்கு 7 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து, ஜனவரி 20 ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு, ‘ஜனவரி 20 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் தன்னிடம் விசாரணை நடத்தலாம்’ என சோரன் அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அதே சமயம் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்தும் அமலாக்கத்துறையை கண்டித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று 7 மணி நேரம் விசாரணைக்குப் பிறகு அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வரும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதிய முதலமைச்சராக பதவியேற்க தீவிரம் காட்டி வரும் சம்பாய் சோரனை ஆளுநர் இதுவரை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. இந்நிலையில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள், விமானம் மூலம் ஹைதராபாத் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். முக்தி மோர்ச்சா கட்சி மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஹைதராபாத் கச்சிபௌலியில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாஜக குதிரை பேரம் நடத்த வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.