ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்த்தை வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370ஆவது பிரிவை திரும்பப் பெறும் தீர்மானம் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பெற்றது. இதன் மீதான விவாதத்தில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் வைகோ, இந்த முடிவை கடுமையாக எதிர்த்தார்.
அவரது பேச்சில் காங்கிரஸையும் கடுமையாக விமர்சித்தார். "சுதந்திரம் பெற்றதில் இருந்து இத்தனை ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி பல முறை ஜனநாயகத்தை கொன்றுள்ளது. எனது நண்பர் ஃபரூக் அப்துல்லா ஒரு நாள் அதிகாலையில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது திடீரென அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. அப்போது நான் அவரிடம் கூறினேன், "நீங்கள் உங்கள் தந்தை சொன்ன வார்த்தைகளை மறந்துவிட்டீர்கள்". 1980இல் ஃபரூக் அப்துல்லா தனது தந்தை ஷேக் அப்துல்லாவிடம் என்னை அழைத்துச் சென்று அறிமுகம் செய்தபொழுது, ஷேக் அப்துல்லா சொன்னார், "தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் என் இளம் நண்பனே, ஒன்றை மட்டும் எப்போதும் நினைவுகொள் இந்திய அரசியல் அகராதியில், காங்கிரஸ் கட்சிக்கு நட்பு, நன்றியுணர்வு ஆகிய இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் இடமில்லை" என்று. அதை நான் ஃபரூக்கிற்கு நினைவூட்டினேன்" என்று மிகவும் உணர்வுப்பூர்வமாகப் பேசினார்.
மேலும் "கார்கில் போரில் எங்கள் தமிழ் வீரர்கள் பலர் உயிர்த்தியாகம் செய்தார்கள். இன்று என்ன ஆனது? ஒரு பக்கம் தாலிபான், ஒரு பக்கம் அல்-கொய்தா என தீவிரவாதத்தால் சூழப்பட்டிருக்கிறது. நீங்கள் மேலும் அதற்கு ஆபத்தை விளைவித்திருக்கிறீர்கள். இன்று நீங்கள் எடுத்திருக்கும் இந்த முடிவு உலகில் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடு கொண்ட நாடுகளுக்கு துருப்புச்சீட்டாக அமையும். கிழக்கு தைமூர், தெற்கு சூடான் போல காஷ்மீர் ஆவதற்கு வாய்ப்பை நீங்கள் உருவாக்கியிருக்கிறீர்கள். என் நெஞ்சம் பற்றி எரிகிறது. காஷ்மீர் மக்கள் மனது எரிகிறது. காஷ்மீர் மாநில அரசுகளை மாற்றி மாற்றி ஜனநாயகத்தில் விளையாடிய காங்கிரஸ் கட்சியும் இதில் முக்கிய குற்றவாளிதான்" என்று ஆவேசமாகப் பேசினார் வைகோ.
அவரது பேச்சினிடையே சலசலப்பு எழுந்தபொழுது, குரலை உயர்த்தி "ஜனநாயகத்தில் நம்பிக்கையுடைய ஒவ்வொருவரும் என் பேச்சை கவனியுங்கள். உங்களுக்கு எதிர்க்கருத்து இருக்கலாம், பரவாயில்லை. ஆனால், என் கருத்தைக் கேளுங்கள்" என்று அழுத்தமாகக் கூறினார். இறுதியாக, "இந்த நாள் இந்தியாவின் தலைகுனிவுக்குரிய நாள்... ஷேம்... ஷேம்... ஷேம்... இது ஜனநாயகக் கொலை... மர்டர்" என்று அவர் கூறிய போது அவையில் சில உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து ஒலி எழுப்பினர். அப்போது மீண்டும் "மர்டர்... மர்டர்... மர்டர்..." என்று மூன்று முறை கூறி கொந்தளிப்பு அடங்காமலேயே அமர்ந்தார் வைகோ.