பீகார் தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற்று முடிந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டன. இந்நிலையில், இந்தியாவே பெரிதும் ஆவலாக எதிர்பார்க்கும் இந்தத் தேர்தல் முடிவுகள் நேற்று நள்ளிரவு வெளியானது. இதில் 125 இடங்களில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக நடைபெற்ற பா.ஜ.க வெற்றிவிழா கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது, "பீகாரில் தற்போது வளர்ச்சியே வெற்றிபெற்றுள்ளது. சிறப்பான ஆட்சியால் இந்த வெற்றி சாத்தியமடைந்துள்ளது. நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் தற்போது பா.ஜ.க இருக்கிறது. இந்தத் தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற்றுள்ளது" என்றார்.