Skip to main content

அதிருப்தி எம்.எல்.ஏ க்கள் 13 பேருக்கு இடைத்தேர்தலில் வாய்ப்பளிக்கும் பாஜக...

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் இணைந்து சுயேட்சைகளின் ஆதரவுடன் அங்கு ஆட்சி அமைத்தன.

 

bjp candidate list for karnataka byelection

 

 

மஜத கட்சியின் மாநில தலைவராக இருந்த குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால், அமைச்சரவை பங்கீடு, துறை ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் காங்கிரஸ்-மஜத கூட்டணி கட்சியினரிடையே அதிருப்தி எற்பட்டது. முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுமான ரமேஷ் ஜார்கிகோளி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் குமாரசாமி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அவர்களை சரிகட்டும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து  17 எம்.எல்.ஏ க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது காங்கிரஸ்- மஜத கூட்டணிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் எடியூரப்பா தலைமையில் பாஜக அரசு கர்நாடக மாநிலத்தில் பொறுப்பேற்றது.

அதேசமயம், தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் தங்களது மீதான சபாநாயகரின் நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என அக்டோபர் 21ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், இந்த இடைத்தேர்தலில் தங்களை போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்களும் உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு மனுத்தாக்கல் செய்தனர். இதன் காரணமாக டிசம்பர் 5ஆம் தேதிக்கு இடைத்தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் எனவும், அதேசமயம், அவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடை இல்லை எனவும் அறிவித்தது. இதனையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏ க்கள் இன்று பாஜகவில் இணைந்தனர். இந்த சூழலில் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. இதில் தகுதி நீக்கம் செய்யப்பட்டு பாஜகவில் இணைந்த 13 பேருக்கு பாஜக தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்