இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இருபது ஓவர் போட்டித் தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. ஏற்கனவே, இரண்டு போட்டிகளை வென்று, இந்தியா தொடரைக் கைப்பற்றிய நிலையில், மூன்றாவது மற்றும் இறுதி 20 ஓவர் போட்டி இன்று நடைபெற்றது.
இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், அந்த அணியின் கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான, பின்ச் டக் அவுட்டானார். இருப்பினும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ வேட்டும், மேக்ஸ்வெல்லும் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். மேத்யூ வேட் 53 பந்துகளில் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல், 36 பந்துகளில் 54 ரன்கள் குவித்து நடராஜன் பந்தில் போல்டானர். இவர்கள் இருவரின் அதிரடியால், ஆஸ்திரேலியா அணி இருபது ஓவர்கள் முடிவில், 186 ரன்கள் குவித்து, இந்திய அணிக்கு 187 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இந்திய அணித்தரப்பில், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும், நடராஜன் மற்றும் ஷார்துல் தாக்குர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். தொடர்ந்து ஆடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்திய அணி தரப்பில் கோலி 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.