பிரதமர் நரேந்திர மோடி, கொல்கத்தாவில் உள்ள சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் இரண்டாவது வளாகத்தை இன்று காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் காணொளி வாயிலாக பங்கேற்றிருந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அந்த வளாகத்தை ஏற்கனவே திறந்துவிட்டதாக பிரதமர் மோடிக்கு அதிர்ச்சியளித்துள்ளார்.
திறப்பு விழாவில் பேசிய மம்தா பானர்ஜி இதுதொடர்பாக, "இந்த திட்டத்தை பிரதமர் காணொளி வாயிலாக திறந்து வைக்கிறார். ஆனால், இந்த நிறுவனம் மாநில அரசுடனும் தொடர்புடையது என்பதால், நாங்கள் இதை முன்பே திறந்துவிட்டோம் என்பதை பிரதமருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறினார்.
மேலும் மம்தா, "இந்த திட்டத்திற்கு 25% நிதியை மாநிலம் வழங்குகிறது என்பதை அறிவதில் பிரதமர் மகிழ்ச்சியடைவார். புற்றுநோய் மருத்துவமனை வளாகத்துக்கான நிலத்தையும் நாங்கள் அளித்துள்ளோம்" எனவும் தெரிவித்தார்.