
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் 2ஆம் உலகப் போரின் 80ஆம் ஆண்டு வெற்றி நாள் கொண்டாட்டம் மே மாதம் 9ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனையொட்டி மே 9ஆம் தேதி நடைபெற உள்ள அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்ய அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்திருந்தது. இதனையடுத்து இரு நாடுகளுக்கிடையேயான ராஜாங்க ரீதியான பேச்சுவார்த்தை மற்றும் வெளியுறவுத் துறைத் தலைவர்கள் இடையேயான பேச்சுவார்த்தை என பல்வேறு நிகழ்வுகளுக்கு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.
இதற்கிடையே காஷ்மீருக்குச் சுற்றுலாச் சென்ற பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் கொடூரமாகத் தாக்குதல் நடத்தினர். காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த இந்த தாக்குதலில், சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பலியாகினர். இந்த தாக்குதல் சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஒரு பயங்கரவாத கும்பல், இந்த தாக்குதல் சம்பவத்திற்குப் பொறுப்பேற்றுள்ளதால் பாகிஸ்தானுக்கு எதிரான அதிரடி நடவடிக்கையில் மத்திய அரசு எடுத்தது. அதே வேளையில், இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தானும் தொடர் நடவடிக்கைகளை எடுத்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் நிலவும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் மே 9ஆம் தேதி ரஷ்யாவில் நடைபெற உள்ள 2ஆம் உலகப் போரின் வெற்றி நாள் விழாவில் பங்கேற்பதற்காகப் பிரதமர் மோடி ரஷ்யா செல்வதாக இருந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடிக்குப் பதிலாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கொண்டாட்டத்தில் பங்கேற்பார்கள் என்ற அறிவிப்பையும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக பஹல்காம் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி தனது 2 நாள் சவுதி அரேபியா பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு டெல்லி கடந்த 23ஆம் தேதி (23.04.2025) வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.