புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் தாக்கல் கூட்டம் கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உரை நேற்று சட்டப்பேரவை அரங்கில் நடந்தது. வழக்கமாக இந்த சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்யும் எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் தரப்பினர் நேற்றுதான் முழுமையாக பங்கேற்றனர். அதில் பங்கேற்ற எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயபாலுக்கு கரோனா தொற்று உறுதியானது தெரிய வந்தது. அவர் தற்போது ஜிப்மரில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதையடுத்து புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம் முழுக்க கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் அரங்கு முதல்முறையாக மூடப்பட்டது. இரு நாட்களுக்கு அந்த அரங்கு மூடியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து சட்டபேரவை கூட்டம் சட்டமன்ற வளாகத்தில் உள்ள மரத்தடியில் நடத்தப்படும் என்று சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். அதைத்தொடர்ந்து, அங்கு பந்தல் அமைக்கப்பட்டு, இருக்கைகள் போடப்பட்டது. ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இருக்கைகள் போடப்பட்டு சபாநாயகர் சிவக்கொழுந்து பேரவையை தொடங்கி வைத்தார். பேரவை தொடங்கிய உடன் சபாநாயகர் சிவக்கொழுந்து மரத்தடியில் சட்டப்பேரவை நடைபெறுவதால் உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அனைத்து துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யும் அரசாணையை முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் முன்மொழிய, தொடர்ந்து விவாதம் நடைபெற்று பட்ஜெட்க்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
முன்னதாக அரசு எந்தவித தடுப்பு நடவடிக்கையும் எடுக்காததால் சட்டமன்ற உறுப்பினருக்கு கரோனா வைரஸ் பரவி உள்ளது என்றுகூறி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தனர். அதனால் சட்டப்பேரவை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் புதுச்சேரியில் மதுபான விற்பனைக் கொள்கையில் அரசுக்கு வருமானம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையின் மீது பேச வாய்ப்பு அளிக்காததால் மரத்தடியில் நடந்த பேரவை கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது.
அதனைத் தொடர்ந்து நிறைவுரையாற்றிய முதலமைச்சர் நாராயணசாமி, "சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் சபாநாயகர், துணை சபாநாயகர் உட்பட அமைச்சர்கள், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் 7 நாட்களுக்கு தனிமை படுத்திக்கொள்ள வேண்டும். வரும் திங்கட்கிழமை சட்டமன்ற வளாகத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்களுக்கு கரோனா பரிசோதனை என நடத்தப்படும்" என தெரிவித்தார். புதுச்சேரியில் நிதி ஒதுக்கீடு மசோதா நிறைவேறியதை அடுத்து காலவரையின்றி சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.