
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காஷ்மீருக்குச் சுற்றுலாச் சென்ற பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் கொடூரமாகத் தாக்குதல் நடத்தினர். காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த இந்த தாக்குதலில், சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பலியாகினர். இந்த தாக்குதல் சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஒரு பயங்கரவாத கும்பல், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ளதால் பாகிஸ்தானுக்கு எதிரான அதிரடி நடவடிக்கையில் மத்திய அரசு எடுத்தது. அதே வேளையில், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானும் தொடர் நடவடிக்கைகளை எடுத்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் நிலவும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே செல்லுங்கள் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “பஹல்காம் பகுதியில் அப்பாவி மக்களை கொன்ற தீவிரவாதிகளுக்கும், அவர்களை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கும் ஆதரவாக பேசுவதும் மிகத் தவறு. இருப்பினும் நாங்கள் அப்படித்தான் பேசுவோம் என்று கூறுபவர்கள் பாகிஸ்தானுக்கே செல்லுங்கள். இந்துக்களுக்கு என்று இருக்கும் ஒரே நாடு இந்தியா மட்டும் தான். இங்குக் கூட நாங்கள் சுதந்திரமாக வெளியே சென்றுவர கூடாது என்றால் எப்படி? என்று தெரிவித்துள்ளார்.