டோக்கியோவில் தற்போது நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியா சார்பாக பங்கேற்றவர்களில் மீராபாய் சானு பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். பெண்களுக்கான குத்துச்சண்டையில் வெல்டர்வெயிட் பிரிவில் (64 - 69), இந்தியாவின் லோவ்லினா போர்கோஹெய்ன் வெண்கலம் வென்றுள்ளார். பி.வி. சிந்து பேட்மிண்டனில் வெண்கலமும், ரவிக்குமார் தஹியா மல்யுத்த போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளனர். மேலும் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்றுள்ளது.
இதையடுத்து, இன்று (06.08.2021) காலை நடைபெற்ற 65 கிலோ ஆடவர் மல்யுத்த போட்டியில், இந்தியாவின் பஜ்ரங் புனியா அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார். இந்தநிலையில், 65 கிலோ மல்யுத்த அரையிறுதிப் போட்டி தற்போது நடைபெற்றது. இதில் அஜர்பைஜான் நாட்டின் ஹாஜி அலியேவிடம் பஜ்ரங் புனியா தோல்வியடைந்தார்.
இருப்பினும், பஜ்ரங் புனியாவிற்கு இன்னும் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புள்ளது. நாளை வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் அவர் விளையாடவுள்ளார்.