Skip to main content

“11 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசுக்கு ஞானோதயம் வந்துள்ளது” - ராகுல் காந்தி

Published on 30/04/2025 | Edited on 30/04/2025

 

Rahul Gandhi says, caste census has been announced after 11 years

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரயில்வே துறை அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று (30-04-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “சாதிவாரி கணக்கெடுப்பு என்பது முதல் படி என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் ஒரு புதிய வளர்ச்சி முன்னுதாரணத்தைக் கொண்டுவருவதே நமது தொலைநோக்குப் பார்வை. இடஒதுக்கீடு மட்டுமல்ல, சில கேள்விகளையும் மத்திய அரசிடம் நாங்கள் கேட்கிறோம். அது பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் என யாராக இருந்தாலும், இந்த நாட்டில் அவர்களின் பங்களிப்பு என்ன? சாதி கணக்கெடுப்பு மூலம் அது கண்டறியப்படும்

சாதி கணக்கெடுப்பை நடத்துவோம் என்று நாங்கள் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தோம். 50% உச்சவரம்பையும், நடைமுறையில் உள்ள செயற்கையான சுவரையும் நாங்கள் அகற்றுவோம் என்றும் கூறியிருந்தோம். 50% இட ஒதுக்கீடு உச்சவரம்பை நீக்க வேண்டும். நரேந்திர மோடி 4 வழக்குகள் மட்டுமே இருப்பதாகக் கூறி வந்தார். என்ன நடந்தது என்று தெரியவில்லை, ஆனால் திடீரென்று 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஞானோதயம் வந்து மத்திய அரசு, சாதி கணக்கெடுப்பு கொண்டு வந்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென பல முறை கோரிக்கை வைத்துள்ளேன். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை ஏற்று மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு கொண்டு வந்துள்ளது. 

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அழுத்தங்களுக்கு மத்திய அரசு பணிந்துள்ளது. நாங்கள் அதை முழுமையாக ஆதரிக்கிறோம். ஆனால் எங்களுக்கு ஒரு காலக்கெடு வேண்டும். இது எப்போது நடக்கும் என்பதை அறிய விரும்புகிறோம். இது முதல் படி. அரசியல் சாசனம் 15(5)ன் படி தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். என்ன காரணத்திற்காக மத்திய அரசு தற்போது சாதிவாரி கணக்கெடுப்பை அறிவித்துள்ளது என தெரியாது. சாதி கணக்கெடுப்பில் தெலுங்கானா மாதிரியிலான நடத்த வேண்டும். சாதி கணக்கெடுப்பை வடிவமைப்பதில் நாங்கள் அரசாங்கத்திற்கு எங்கள் ஆதரவை வழங்குகிறோம்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்