அசாம் அரசு தனது மாநிலத்தில் 34 பள்ளிகளை மூடப்போவதாக அறிவித்துள்ளது. அங்கு படித்த அனைத்து மாணவர்களும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அசாம் மாநிலத்தில் உலா மாவட்டத்தில் பல பள்ளிகள் செயல் படுகின்றன. அம்மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி 10ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவு வெளியானது. மாநிலத்தில் 34 பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஒருவர் கூட தேர்ச்சி பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தின் மொத்த தேர்ச்சி விழுக்காடு 56.49%. இது 2018 ம் ஆண்டினை விடக்குறைவு.
இது குறித்து கருத்து தெரிவித்த அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ரனோஜ் பேகு " தேர்ச்சி விகிதம் பூஜ்ஜியம் என இருக்கும் பள்ளிகளுக்கு அரசு பொதுநிதியை செலவிடுவது அர்த்தமற்ற செயல்" என கூறினார். மேலும் "அந்த பள்ளிகள் மூடப்படும் எனவும் அங்கு படிக்கும் மாணவர்கள் அருகில் உள்ள பள்ளிகளில் தொடர்ந்து படிக்க அனுமதிக்கப்படுவர்" எனவும் தெரிவித்தார். பல்வேறு அரசு அதிகாரிகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் குறைவான செயல்பாடுகளே இந்த முடிவுகளுக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.
அரசியல் கட்சித் தலைவர்களும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து கூறிய அரவிந்த் கெஜ்ரிவால் "பள்ளிகளை மூடுவதற்கு பதிலாக பள்ளிகளின் கல்வி கொடுக்கும் தரத்தை மேம்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளார். உயர்கல்வித்துறை இயக்குனர் மமதா ஹோஜாய் கூறுகையில், "அந்த 34 பள்ளிகள் அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கப்படும்" என தெரிவித்தார்.