ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ, 35A ரத்து செய்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நேற்று அறிவிப்பை வெளியிட்டது. அத்துடன் காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்படும் என மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும் காஷ்மீர் மாநில பிரிப்பு மசோதா, காஷ்மீர் மாநிலத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேறியது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை மக்களவையில் காஷ்மீர் மாநிலம் தொடர்பான மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். ஆனால் மசோதா மீதான விவாதம் இன்று நடைபெறும் என்று மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவித்தார்.
![kashmir nationalist party leader farooq abdullah called press meet union government decision jammu against](http://image.nakkheeran.in/cdn/farfuture/AisxMcMeqByPrgIwrwL4W2k40B_dfRZGJkDY9eou7MM/1565095953/sites/default/files/inline-images/EBR88WfWwAApzml.jpg)
அதன் தொடர்ச்சியாக இன்று காலை கூடிய மக்களவை கூட்டத்தில் காஷ்மீர் மசோதா மீதான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்தார். அதனை தொடர்ந்து மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய எதிர்கட்சிகள், ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், எந்த ஒரு மசோதாவை மத்திய அரசு கொண்டு வருவதாக இருந்தாலும், முதலில் நாடாளுமன்றத்தில் மசோதாவை அறிமுகம் செய்வது வழக்கம். ஆனால் காஷ்மீர் விவகாரத்தில், குடியரசுத்தலைவரின் ஒப்புதலை பெற்று சட்டமாக்கிய பின் நாடாளுமன்றத்தில் மசோதவை தாக்கல் செய்தது என்று மத்திய அரசை குற்றம் சாட்டினார்.
![kashmir nationalist party leader farooq abdullah called press meet union government decision jammu against](http://image.nakkheeran.in/cdn/farfuture/Y8gloUMOWzYQ80zmkYWw7-E_zwd31TKK1phg7YBl8SI/1565095965/sites/default/files/inline-images/AMITSHAH-LS.jpg)
அதனை தொடர்ந்து பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த சுப்ரியா சுலே, தேசிய மாநாட்டு கட்சித்தலைவர் பரூக் அப்துல்லா வீட்டு சிறையில் உள்ளாரா என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பரூக் அப்துல்லா எம்.பி கைது செய்யப்படவோ, தடுப்புக்காவலில் வைக்கப்படவோ இல்லை. தனது இல்லத்தில் சொந்த விருப்பத்தின் பேரில் இருக்கிறார் என்றார். இந்த நிலையில் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த தேசிய மாநாட்டு கட்சித்தலைவர் பரூக் அப்துல்லா, நான் வீட்டுக் காவலில் கைது செய்யப்படவில்லை, எனது சொந்த விருப்பப்படி என் வீட்டிற்குள் தங்கியிருக்கிறேன் என்று உள்துறை அமைச்சகம் பாராளுமன்றத்தில் பொய் சொல்கிறது என்றும், மத்திய அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று கூறினார்.
![kashmir nationalist party leader farooq abdullah called press meet union government decision jammu against](http://image.nakkheeran.in/cdn/farfuture/2a7ihV6dxuNmghF5oLGFo0Iw6Ccit_Phws2z54RJFVs/1565095983/sites/default/files/inline-images/union-home-minister-amit-shah-with-law-minister-873802.jpg)
முதுகில் குத்தாதீர்கள்! நெஞ்சில் சுடுங்கள்! ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு செய்தது ஜனநாயக விரோத நடவடிக்கை என்று ஆவேசமாக தெரிவித்தார். காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நேற்று இரவு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் செய்து செய்யப்பட்டனர். மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளையுடன் முடியும் நிலையில், இன்று மாலை காஷ்மீர் தொடர்பான சட்டங்கள் அனைத்தும் மக்களவையில் நிறைவேற உள்ளது. ஏற்கனவே மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியுள்ளதால், மக்களவையில் எளிதாக நிறைவேற்றி காஷ்மீர் மாநிலத்தில் உடனடியாக சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம்.