Skip to main content

தந்தை வழியை பின்பற்றி அதிரடி காட்டும் முதல்வர் ஜெகன்...நாயுடு அதிர்ச்சி!

Published on 02/07/2019 | Edited on 02/07/2019

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக முதன் முறையாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றார். நடந்து முடிந்த ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில், முதல்வர் ஜெகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வி அடைந்தது. முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்ற நாள் முதல் அரசு நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதே போல் தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் தீவிரம் காட்டி வருகிறார்.

 

அதன் ஒரு பகுதியாக அரசு பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்க்கும் தாய்மார்களின் வங்கி கணக்கில் ரூபாய் 15,000 டெபாசிட் செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் ஒவ்வொரு வீட்டிற்கும் ரேஷன் பொருட்களை வீடு தேடி சென்று வழங்கும் திட்டத்தையும் தொடங்கியுள்ளார். அதன் தொடர்ச்சியாக ஆந்திர மாநில காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கும் திட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டினார். 

 

 

 

JAGANMOHAN REDDY CM OF ANDHRA

 

 


இந்நிலையில் "மக்களுடன் தினமும் ஒரு மணி நேரம் முதல்வர் சந்திப்பு" என்ற பெயரில் 'மக்கள் தர்பார்' நிகழ்ச்சியை தொடங்கினார். அதில் மக்கள் நேரடியாக முதல்வர் ஜெகனிடம் மனுக்களை வழங்கலாம் என ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 07.00 மணி முதல் 08.00 வரையும் (அல்லது) 08.00 மணி முதல் 09.00 மணி வரை முதல்வரிடம் நேரடியாக தங்களின் குறைகளை தெரிவிக்கலாம் என மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்கென்று தனி அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

மனு கொடுக்க வரும் மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, உணவு வசதிகள் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தையுமான, ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்த ஆட்சி காலத்தில் மக்களை தினந்தோறும் சந்தித்து மனுவை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் ஜெகனின் நடவடிக்கை கண்டு அம்மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்