கரோனா பரவல் காலத்தில் மக்களைப் பாதித்துள்ள வேலையின்மை மற்றும் பசியை பா.ஜ.க. ஒரு பிரச்சனையாகவே கருதவில்லை என அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடு முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், இந்த திடீர் முடக்கத்தால் இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலையோ, வருமானமோ இல்லாத நிலையில், அவர்கள் தங்களது சொந்த ஊர்களை நோக்கிப் பல நூறு கிலோமீட்டர்கள் நடந்தே செல்லும் சூழலும் நிலவி வருகிறது. இதில் விபத்தில் சிக்கிப் பல தொழிலாளர்கள் இதுவரை உயிரிழந்துள்ளார். மேலும், வறுமை காரணமாகச் சிலர் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
இந்நிலையில், இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள அகிலேஷ் யாதவ், "தற்கொலை சம்பவங்களின் மூலமாக உ.பி.யில் வேலையின்மை ஒரு பெரும் பிரச்சனையாக எழுந்துள்ளது. கரோனாவின் தாக்கத்தை மறந்துவிட்டு பா.ஜ.க. தேர்தல்களில் கவனம் செலுத்தி வருகிறது. வேலைவாய்ப்பின்மையையும் மக்களின் பசியையும் ஒரு பிரச்சனையாகவே பா.ஜ.க. கருதாதபோது, எப்படி அவற்றை தீர்க்கப் போகிறது. விரைவில் பீகார் தேர்தல் வர உள்ளது, சில தினங்களுக்குப் பிறகு ‘நட்சத்திர பிரச்சாரகர்’ மீண்டும் பறக்கத் தொடங்கிவிடுவார்” எனத் தெரிவித்துள்ளார்.