Skip to main content

மீண்டும் 'ஜிகா வைரஸ்' - மாநில அரசுகளுக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கை!

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
Again 'Zika virus'-warning given to state governments

'ஜிகா' வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமாகியுள்ளதால் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என மருத்துவ சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஏடிஎஸ் கொசுக்கள் மூலம் உருவாகும் ஜிகா வைரஸ் தொற்று பரவல் தற்போது மகாராஷ்டிராவில் அதிகமாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் இதுவரை எட்டு பேர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. காய்ச்சல், தலைவலி, தோல் வெடிப்பு, மூட்டு வலி, கண் இமைகளில் வீக்கம் ஆகியவை ஏழு நாட்களுக்கு மேல் நீடித்தால் அவை ஜிகா வைரஸ் தாக்கத்தின் அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

உடனடியாக இந்த அறிகுறிகள் இருப்போர் மருத்துவரை அணுக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பகலில் கடிக்கும் ஏடிஎஸ் கொசுக்களால் இந்த வைரஸ் பரவுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் கருவில் உள்ள குழந்தைகளை தாக்கும் அபாயம் கொண்டது எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து அனைத்து மகப்பேறு மருத்துவமனைகளிலும் இது தொடர்பாக கண்காணிப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதேநேரம் ஜிகா வைரஸ் தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருக்கும் ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தி ஆகாமல் பார்த்துக்கொள்ள மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

போலீசார் தாக்கியதால் காயம்; மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு 

Published on 06/07/2024 | Edited on 06/07/2024
Ordered to submit medical report of Pandian who was injured  by police

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி காவல் சரகத்தில் கடந்த மாதம் 9 ந் தேதி ஒரு மூதாட்டியை தாக்கி நகை பறித்துச் சென்றதாக வந்த புகாரையடுத்து சந்தேக நபராக கூறப்பட்ட ரவி மகன் பாண்டியன்(18) மற்றும் அவரது 17 வயது நண்பன் ஆகியோரை 10 ந் தேதி விசாரனைக்காக அழைத்துச் சென்று 16 ந் தேதி ஆலங்குடியில் கஞ்சா விற்றதாக 17 வயது சிறுவனை ஆலங்குடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு திருச்சி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் விடப்பட்டார்.

அதே போல 18 ந் தேதி கோட்டைப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கீழமஞ்சக்குடி கிராமம் கொள்ளுவயல் ஆற்றுப்பாலம் அருகே 1 கிலோ 150 கிராம்  கஞ்சாவுடன் பைக்கில் வந்த போது கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் முன்னிலையில் அவர்கள் சாட்சியாக பாண்டியனை கைது செய்தனர். மேலும், பைக் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்த போது உடலில் காயங்களுடன் இருந்ததாக வாக்குமூலம் பதிவு செய்து மணமேல்குடி மருத்துவமனையில் காண்பித்து மருத்துவச் சான்று பெற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால் போலீசார் தன்னை தாக்கியதால் படுகாயம் ஏற்பட்டு வலிக்கிறது என்று பாண்டியன் கதறியதால் உடனே புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு பாண்டியனின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதால் டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து பல நாட்கள் டயாலிசிஸ் செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்பகுதியில் உள்ள புண்களும் மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாண்டியன் தரப்பில் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் போலீசார் தாக்கியதில் ஏற்பட்டுள்ள காயங்களுக்கு பாண்டியனுக்கு தனியார் மருத்துவமனையில் அரசு செலவில் உயர் சிகிச்சை அளிக்கவும், மாற்று விசாரணை கேட்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு வெள்ளிக்கிழமை(5.7.2024) விசாரணைக்கு வந்த நிலையில் பாண்டியனின் உடல்நிலை மற்றும் சிகிச்சைகள் பற்றிய மருத்துவ அறிக்கையை வரும் 10 ந் தேதி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், போலீசார் தரப்பில் கவுண்டர் கொடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story

இந்திய கிரிக்கெட் அணிக்கு மகாராஷ்டிரா அரசு சார்பில் பரிசு அறிவிப்பு!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Announcement of prize for the Indian cricket team on behalf of Maharashtra govt

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நேற்று (04.07.2024)  டெல்லி வந்தனர். அப்போது டெல்லி விமான நிலையத்தின் வெளியே திரளாகக் காத்திருந்த ஏராளமான ரசிகர்கள் இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு காலை 11 மணியளவில் பிரதமர் மோடி காலை உணவளித்து வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு டெல்லியிலிருந்து புறப்பட்டு மும்பை  வந்தடைந்தனர். அப்போது இந்திய அணியினர் வந்த விமானத்திற்கு வாட்டர் சல்யூட் (WATER SALUTE) அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி தனது வெற்றி அணிவகுப்பை மும்பையில் தொடங்கினர். இந்திய கிரிக்கெட் அணியின் வருகைக்காக மும்பை மரைன் டிரைவில் பொதுமக்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இந்திய அணியின் வெற்றி அணிவகுப்பு மரைன் டிரைவிலிருந்து வான்கடே மைதானம் வரை நடைபெற்றது. இதனையடுத்து மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற கொண்ட நிகழ்ச்சியில் இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய்க்கான காசோலையை பிசிசிஐ அதிகாரிகள் வழங்கினர். இதற்கிடையே இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை மும்பை கிரிக்கெட் சங்க (எம்.சி.ஏ.) அதிகாரிகள் சிறப்பாக வரவேற்பளித்தனர்.

இந்நிலையில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் கவுரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொண்டார். இதனையடுத்து டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.11 கோடி பரிசுத் தொகையை மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. முன்னதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், “நான் நேற்று இந்திய அணியை வரவேற்றேன். இன்று ரோஹித் சர்மா இங்கு வந்தார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் உலகக் கோப்பையை வென்ற வீரர் என்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். மேலும் அவர் மும்பையைச் சேர்ந்தவர். எங்கள் வீரர்கள் அனைவரும் நேற்று மும்பையில் இருந்த போது நான் வரவேற்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.