கரோனா பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பொருளாதாரத்தை மீட்க கரோனா ஊரடங்கை நீக்கிவருகிறது மத்திய அரசு. அதில் வழிப்பாட்டு தலங்களை திறக்கவும் அனுமதித்தது. உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலை கடந்த ஜூலை மாதமே திறந்துவிட்டது ஆந்திரா அரசாங்கம். கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர் முதல் கோயில் பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் வரை நூற்றுக் கணக்கானவர்களுக்கு கரோனா பரவி அர்ச்சகர் உட்பட சிலர் இறந்தும் கோயிலை மூடவில்லை.
10 வயதுக்கு உட்பட்டவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் கோயிலுக்குவர அனுமதியில்லை என்கிறது கோயில் நிர்வாகம். ஆனாலும் அரசியல் பிரமுகர்கள் உட்பட அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு இந்த விதி பொருந்துவதில்லை. அவர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டுதான் செல்கிறார்கள். பகலும் – இரவும் பரபரப்பாகவே இருந்த ஏழுமலையான் கோயில் தற்போது கலையிழந்து காணப்பட்டாலும் வருமானம் மட்டும் குறையவில்லை என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
சராசரியாக தினமும் 70 ஆயிரம் பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருவார்கள். இவர்கள் மூலமாக தினசரி உண்டியல் வருமானம் ரூ.2.5 கோடி. லட்டு விற்பனை, 300 ரூபாய் தரிசன டிக்கட் விற்பனை, மற்ற பூஜை கட்டணம் உட்பட பல்வேறு வகைகளில் கோயிலின் வருமானம் தினசரி ரூ.5 கோடி. கரோனா பரவலை தடுக்க அரசின் உத்தரவால் மார்ச் 20ஆம் தேதி கோயில் மூடப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்காக மீண்டும் ஜூன் 11ஆம் தேதி திறக்கப்பட்டது. இலவச தரிசனத்தை ரத்து செய்து ஒரு டிக்கெட் 300 ரூபாய் என தொடக்கத்தில் ஆன்லைன் டிக்கெட் 9 ஆயிரம், நேரடி டிக்கட் 3 ஆயிரம் என வழங்கப்பட்டு வந்தது. தற்போது 26 ஆயிரம் டிக்கெட் விநியோகிக்கப்படுகிறது. மணிக்கு 5 ஆயிரம் பேர் தரிசனம் செய்த இடத்தில் தற்போது 1,500 பேர்தான் தரிசனம் செய்கிறார்கள். அதேபோல் 67 லட்டு கவுன்டர்கள் உள்ளன. அதில் 27 மட்டுமே திறக்கப்படுகின்றன.
தங்கும் அறைகள் 1 நாள் வாடகைக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. மொட்டை அடிப்பதில் கட்டுப்பாடு என பல மாற்றங்கள் செய்தாலும், வெளிமாநில பக்தர்கள் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டிற்கு புக் செய்துவிட்டு, அதை வைத்து இபாஸ் வாங்கிக்கொண்டு வரவேண்டும் என கட்டுப்பாடு இருப்பதால் பக்தர்கள் வருவதில்லை. தற்போது தினமும் அதிகபட்சமாக 25 ஆயிரம் பக்தர்கள் அளவே வருகின்றனர். கடந்தாண்டு இதே பிரம்மோற்சவ நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை 3 லட்சம். புரட்டாசி மாதத்தில் தினசரி 1.5 லட்சம். ஆனால் இந்தாண்டு பிரம்மோற்சவத்துக்கு கரோனாவால் பக்தர்களின் வருகை வெறும் 25 ஆயிரம்தான். புரட்டாசி மாத பக்தர்கள் வருகையும் குறைவு. பக்தர்கள் வருகை குறைவே தவிர வருமானம் குறையவில்லை எனச்சொன்னார்கள்.
அதாவது இந்த அக்டோபர் 3ஆம் தேதி 13,486 பேர் சுவாமி தரிசனம் செய்ததில் 1.02 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கையாக வந்துள்ளது. அக்டோபர் 4ஆம் தேதி உண்டியல் வருமானம் ரூ.2.14 கோடியாகவும், கடந்த 5ஆம் தேதி 18 ஆயிரத்து சொச்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய, உண்டியல் வருமானம் 1.44 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்கிறது கோயில் நிர்வாகத்தின் அறிக்கை. கரோனவுக்கு முன்பு சராசரியாக தினமும் 2.80 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை பெற்ற திருப்பதி தேவஸ்தானம் தற்போது 1 கோடியைத்தான் பெறுகிறது.
அதாவது கரோனாவுக்கு முன்பு தினமும் 70 முதல் 80 ஆயிரம் பக்தர்கள் வருவார்கள். அவர்கள் வழியாக 3 கோடி ரூபாய் உண்டியல் வருமானத்தை பெற்றது. தற்போது 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பேர் தான் வருகிறார்கள். இவர்கள் மூலமாக ரூ.1 கோடி உண்டியல் வருவாய் பெறுகிறது. கடந்த காலத்தோடு ஒப்பிடும்போது, இப்போது குறைந்த பக்தர்கள் வருகிறார்கள், ஆனால் உண்டியல் காணிக்கை அதிகம். அதேபோல் கரோனாவுக்கு பயந்து கோயிலுக்கு நேரடியாக வரமுடியாதவர்கள் இஉண்டியல் (ஆன்லைன் ட்ரான்ஸ்பர்) மூலமாக பணத்தை செலுத்துகிறார்கள். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இஉண்டியலுக்கு ரூ.1.79கோடி வந்தது. இந்தாண்டு ஏப்ரல் மாதம் ரூ.1.97 கோடி வந்துள்ளது.
கரோனா காலத்தில் தேவஸ்தானத்துக்கு பெரியளவில் செலவு குறைந்துள்ளது. ஆனால், வருவாய் பெரியளவில் குறையவில்லை. இதனை 2021-2022 ஆம் ஆண்டு தேவஸ்தான நிதிநிலை அறிக்கை வெளியாகும்போது அறிய முடியும் என்றார்கள் கோயிலில் பணியாற்றுபவர்கள்.