டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.
இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து, அவரிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை சட்டவிரோத கைது என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ‘முதலமைச்சர் என்பதற்காக எந்த ஒரு சிறப்புச் சலுகையும் காட்ட முடியாது. மதுபானக் கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. தற்போதைய நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிட முடியாது. பொதுவாழ்வில் ஈடுபடும் நபர்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும்’ என்று கூறி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நேற்று (09.04.2024) உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை திடீர் ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இது குறித்து ராஜ்குமார் ஆனந்த் கூறுகையில், “ஊழலுக்கு எதிரான ஆம் ஆத்மியின் வலுவான செய்தியைப் பார்த்த பிறகு, நான் அதில் சேர்ந்தேன். ஆனால் இன்று, கட்சி ஊழல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் தன்னைக் கண்டறிந்துள்ளது. அதனால்தான் நான் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.
ஆம் ஆத்மி ஊழலில் ஆழமாக உள்ளது. மேலும் ஊழல்வாதிகளுடன் என்னால் வேலை பார்க்க முடியாது. அரசியல் மாறினால் நாடு மாறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். இன்று அரசியல் மாறவில்லை. ஆனால் அரசியல்வாதிகள் மாறிவிட்டார்கள். எனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன். எங்களிடம் 13 மாநிலங்களவை எம்பிக்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் யாரும் பட்டியலினத்தவர், பெண்கள் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை. இந்த கட்சியில் பட்டியலின எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், அமைச்சர்களுக்கு மரியாதை இல்லை. அத்தகைய சூழ்நிலையில், அனைத்து பட்டியல் இன மக்களும் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். இதனால், இனியும் நான் கட்சியில் நீடிப்பது கடினம்.” என்றார்.