தெலுங்கானா மாநிலத்தில் இம்மாதம் 30 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ், பாஜக மற்றும் சந்திரகேசர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகள் படு தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. தெலுங்கானா தேர்தலில் மும்முனை போட்டி நிலவுவதால், அரசியல் கட்சித் தலைவர்கள் மாறி மாறி விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தெலுங்கானா தேர்தலில் பாஜகவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என பிரதமர் மோடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், நேற்று பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியையும், ஆளும் பி.ஆர்.எஸ் கட்சியையும் கடுமையாக விமர்சித்தார். அப்போது திடீரென்று இளம்பெண் ஒருவர் கூட்டத்தின் நடுவே இருந்த டவர் மீது ஏறி, “எனது பிரச்சனையை யாரும் தீர்க்கவில்லை; அது தீர்க்கப்பட்டால் மட்டுமே டவரில் இருந்து இறங்குவேன்” என்று மிரட்டல் விடுத்தார்.
இதனால் மேடையில் இருந்து பதறிப் போன பிரதமர் மோடி, கீழே இறங்குங்கள் உங்களுடன் நாங்கள் இருக்கிறோம்; இப்படி செய்வதால் யாருக்கும் எந்த பயனுமில்லை. நான் வருகிறேன் உங்களின் கோரிக்கையை கேட்கிறேன்” என்று அந்த இளம்பெண்ணிடம் கோரிக்கை வைத்தார். இதனைத் தொடர்ந்து அந்த பெண் போலீசாரின் உதவியுடன் கீழே இறங்கி வந்தார். பிரதமர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தின் போது இந்த சம்பவம் நடந்தது சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.