Skip to main content

விகாஸ் துபேவைப் பிடிக்க 25-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைப்பு... தகவல் அளிப்போருக்கு ரொக்கப்பரிசு அறிவிப்பு...

Published on 04/07/2020 | Edited on 04/07/2020

 

25 police teams formed to catch vikas dubey

 

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ரவுடி விகாஸ் துபேவைப் பிடிக்க 25க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. 

 

உத்தரப் பிரதேசம், கான்பூர் மாவட்டத்தின் சவுபேபூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட திக்ரு கிராமத்தில், போலீஸாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி விகாஸ் துபே பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. கொலை, கொள்ளை என 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள விகாஸ் துபே என்ற அந்த ரவுடியைப் பிடிக்க வெள்ளிக்கிழமை நள்ளிரவு டி.எஸ்.பி. தேவேந்திர மிஸ்ரா, ஆய்வாளர் பில்ஹார், இரு துணை ஆய்வாளர்கள், ஐந்து காவலர்கள் என ஒரு மிகப்பெரிய குழு அந்தக் கிராமத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது ரவுடிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீஸார் 8 பேர் உயிரிழந்தனர்.

 

இந்த விவகாரம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் விகாஸ் துபேவைப் பிடிக்க 25க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கான்பூர் தலைமைக் காவல்துறை ஆய்வாளர் மோஹித் அகர்வால், "விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளைப் பிடிக்க 25க்கும் மேற்பட்ட போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படையினர் பல்வேறு மாவட்டங்களில் அவரைத் தேடி சோதனைகள் நடத்தி வருகின்றனர். உ.பி. போலீஸின் சிறப்பு அதிரடிப்படையும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. மேலும் துபே பற்றிய தகவல் கொடுப்போருக்கு ரூ.50,000 ரொக்கப்பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்