காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புதிய நாடாளுமன்ற வளாக திறப்பு விழாவை புறக்கணித்திருக்கும் நிலையில் அதிமுக திறப்பு விழாவில் கலந்து கொள்ள இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடம் 96 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் 1927 ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானம், பாதுகாப்பு வசதிகள் குறைவு மற்றும் இடவசதி குறைவு காரணமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த நிலையில் புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.
கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் வருகிற மே 28-ம் தேதி பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது. மேலும் நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், "புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல" என பதிவிட்டிருந்தார். நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு பலரும் தங்களது கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.
புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா, கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளன. இந்நிலையில் மே 28ஆம் தேதி நடைபெறும் இந்த திறப்பு விழாவில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, சண்முகம் உள்ளிட்டோர் அதிமுக சார்பில் கலந்து கொள்ள இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.