இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
நீட், நெட் தேர்வு முறைகேடு புகார்கள் தொடர்ந்து தேசிய தேர்வு முகமையின் தலைவர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார். தேசிய தேர்வு முகமையின் தலைவராக இருந்த சுபேத்குமார் சிங்கை நீக்கி புதிய தலைவராக பிரதீப் சிங் கரோலா நியமிக்கப்பட்டார். நுழைவுத் தேர்வில் வெளிப்படைத்தன்மை கொண்டுவர உயர்மட்ட குழு அமைக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. நீட் தேர்வு ரத்து குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,'முதுநிலை நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மிகுந்த விரக்தி அடைந்துள்ளனர். இது திடீரென நடக்கும் நிகழ்வல்ல. மத்திய தேர்வு முகமையின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட கடைசி ஆணி. மாணவர்களின் எதிர்காலத்திற்காக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மருத்துவம் உள்ளிட்ட தொழில்முறை படிப்புகளில் நேர்மையான, சமமான தேர்வு முறையை கொண்டு வர வேண்டும்' என வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் இதேபோல சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ள கருத்தில், 'தேர்வுகளை ரத்து செய்வதற்கு பதிலாக பாஜக அரசை ரத்து செய்யலாம் என மக்கள் சொல்கிறார்கள்' எனக் கருத்து தெரிவித்துள்ளார்.