
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி யஷ்வந்த் வர்மா, ஹோலி பண்டிகையை ஒட்டி, தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த போது அவரது வீட்டில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில், கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில், நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஜொலிஜியம் உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தியதில், நீதிபதி யஷ்வந்த் வர்மா ஏற்கெனவே பணியாற்றி வந்த அலகாபாத் நீதிமன்றத்துக்கே அவரை பணியிட மாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த பஞ்சாப், ஹரியானா தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாச்சல் பிரதேச தலைமை நீதிபதி சந்தவாலியா, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகிய 3 பேர் அடங்கிய குழு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், பணியிட மாற்றம் செய்யப்பட்ட நீதிபதி யஷ்வந்த் வர்மா இன்று (05-04-25) அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். வீட்டில் பணம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை முடியும் வரை, நீதிபதி யஷ்வந்த் வர்மா எந்த வழக்கையும் விசாரிக்க மாட்டார் என்றும், அவருஎந்த நீதித்துறைப் பணியும் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகளுக்காக வழக்கமாக நடத்தப்படும் பதவிப் பிரமாண விழாக்களைப் போல் இல்லாமல், நீதிபதி யஷ்வந்த் வர்மா ஒரு தனி அறையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.