17 ஆவது மக்களவையின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஓம் பிர்லா 1962 ல் ராஜஸ்தானின் கோட்டாவில் பிறந்தார்.
சிறு வயதிலேயே ஆர்.எஸ்.எஸ் மாணவர் அணியான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் உறுப்பினராக இணைந்து, தமது அரசியல் வாழ்க்கையை துவக்கினார். பின்னர் மாணவர் சங்க தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார். முதுகலை வர்த்தகம் படித்த பிறகு பாஜகவுடன் மாநில அளவிலும், மத்திய அளவிலும் கட்சி ரீதியில் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட அவர், 2003ஆம் ஆண்டு, முதல்முறையாக கோடாவிலிருந்து எம்எல்ஏ வாக தேர்வு செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து 2008 சட்டமன்ற தேர்தலிலும் அதே தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றுள்ளார். பின்னர், 2014ஆம் ஆண்டில் கோட்டா மக்களவை தொகுதியில் இருந்து வெற்றி பெற்று எம்.பி., ஆனார். அந்த வெற்றியை தொடர்ந்து இந்த முறையும் அவருக்கு அதே மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் இம்முறையும் வெற்றி பெற்று தற்போது சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.