
தமிழகம் முழுவதும் 10ஆம் வகுப்புத் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடலூரில் மஞ்சக்குப்பம் மைதானம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்புத் தேர்வு நடைபெற்றது. கடந்த 2ஆம் தேதி கல்வித்துறை அதிகாரிகள் இப்பள்ளி தேர்வு மையத்தைச் சோதனை செய்தனர். அப்பொழுது ஒரு அறையில் பிட் பேப்பர் இருந்தது கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவர்கள் காப்பி அடிப்பதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருந்து வருவதாகப் புகார் எழுந்தது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் விசாரணை நடத்த மாவட்ட கல்வித்துறைக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன் தலைமையில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடத்திற்குச் சென்று தேர்வு மையத்தில் பணியாற்றிய முதன்மை கண்காணிப்பாளர் மற்றும் ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் நேற்று (04.04.2025) முதன்மை கண்காணிப்பாளராக பணியாற்றிய தலைமை ஆசிரியர் தணிகைவேல், தேர்வு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் அறை கண்காணிப்பாளராக பணிபுரிந்த பட்டதாரி ஆசிரியர் ரமேஷ், விருத்தாசலம் கல்வி மாவட்ட தேர்வு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.