தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் இந்த மாதத்தில் இரண்டு முறை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்புகளில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
அதன்பிறகு சரத் பவார், எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒன்றைக் கூட்டினார். அதில் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும், பிரபலங்களும் கலந்து கொண்டனர். ஆனால், இந்த கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கவில்லை. இதனால் பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணி அமையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் சரத் பவார் இதனை மறுத்தார்.
"ஒரு மாற்று சக்தியை உருவாக்க வேண்டுமென்றால், அதனை காங்கிரஸை இணைப்பதன் மூலம் மட்டுமே செய்யமுடியும்" என சரத் பவார் தெரிவித்தார். இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். சரத் பவாரின் சந்திப்பிற்குப் பிறகு ராகுல் காந்தி மற்றும் பிரசாந்த் கிஷோரின் சந்திப்பு நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
அதேநேரத்தில் பஞ்சாப் காங்கிரஸில் ஏற்பட்டுள்ள பூசல்கள் தொடர்பாக இந்த சந்திப்பு நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரசாந்த் கிஷோரை பஞ்சாப் முதல்வர் தனது தேர்தல் ஆலோசகராக நியமித்திருந்தது குறிப்பிடத்தக்கது.