அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிச்சாமி கோவையில் இன்று அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக கட்சி ஒப்புதல் இல்லாமல் பேட்டியளித்த வேணுகோபால் எம்.பியை எப்போது கட்சியை விட்டு நீக்கம் செய்யப்போகின்றனர் என கேள்வி எழுப்பினார். பா.ஜ.க விற்கு எதிராக பேசினால் அதிமுகவை விட்டு ஏன் நீக்குகின்றனர் என தெரியவில்லை என தெரிவித்த அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமானால் நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க விற்கு எதிராக அதிமுக வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இரு அணிகள் இணைந்த பின்னர் உயர்மட்ட குழு அமைக்கப்படும் என சொல்லப்பட்ட நிலையில் ஏன் இதுவரை உயர்மட்ட குழு அமைக்கப்படவில்லை எனவும் பழனிச்சாமி கேள்வி எழுப்பினார். அதிமுக சட்டவிதி திருத்தம் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி கேட்டு இருந்ததாகவும், அதற்கு தேர்தல் ஆணையம் அளித்த பதிலில் சட்ட விதிகள் பரீசிலனையில் இருப்பதாகவே தெரிவித்துள்ளதாகவும், இது வரை அதிமுக சட்ட விதி திருத்தங்கள் இது வரை ஏற்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
இரட்டை தலைமைகள் என்பது அதிமுகவிற்கு சரியாக இருக்காது எனவும் அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தேவை என தெரிவித்த கே.சி.பழனிசாமி , ஓ.பி.எஸ். இ.பி.எஸ் இருவரிடம் வரவு செலவு சரியாக இருக்கின்றது எனவும் அவர்கள் இருவரின் சுயநலத்திற்காக கட்சியை பலியிட கூடாது எனவும் தெரிவித்தார். ஓ.பி.எஸ் இ.பி.எஸ் இருவரிடையே என்ன வரவு செலவு இருந்தது என்ற கேள்விக்கு பழனிச்சாமி பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வில்லை எனில் ஒ.பி.எஸ் இ.பி.எஸ் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்திய அவர் , ஓ.பி.எஸ் இ.பி.எஸ் இருவரும் பொறுப்பில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் எனவும் அதிமுக தொண்டர்களை ஏமாற்றக்கூடாது எனவும் தெரிவித்தார். வேறு அணிக்கோ,வேறு கட்சிக்கோ செல்ல போவதில்லை என தெரிவித்த அவர், 30 ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்துவிட்டால் அரசியலில் ஈடுபடாமல் முழுமையாக ஒதுங்கி விடுகின்றேன் எனவும் பழனிச்சாமி தெரிவித்தார்.
பா.ஜ.கவில் இருந்து ஓ.பி.எஸ் , இ.பி.எஸ். இருவரையும் அழைத்து மிரட்டப்பட்டதாகவும் அதன் காரணமாகவே தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்த அவர், அதிமுக சட்டவிதியில் திருத்தங்களை ஏற்க கூடாது என தேர்தல் ஆணையத்தில் மனு செய்த போது ஏன் என் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கே.சி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.
அணிகள் இணைந்த பின்பு கட்சி நிர்வாகிகளிடம் எதுவும் விவாதிப்பதில்லை எனவும் , எடப்பாடி பழனிச்சாமி சொல்வதை கேட்டு நடக்க வேண்டும் என சொல்வதாகவும் அதிமுக ஒன்றும் பண்ணையில்லை எடப்பாடி பழனிச்சாமி சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருப்பதற்கு எனவும் அவர் தெரிவித்தார். உள்நோக்கத்துடன் பேசுவதாக அமைச்சர் ஜெயக்குமார் பேசிவருவதாக கூறிய பழனிச்சாமி , என்ன உள்நோக்கத்துடன் பேசினேன் என்பதை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கவேண்டும் எனவும் நான் எப்போதும் அதிமுககாரன்தான் வேறு எங்கும் போகமாட்டேன் எனவும் அவர் தெரிவித்தார்.
ஒ.பி.எஸ் தனி அணியாக இருந்த வரை மக்களிடம் வரவேற்பு இருந்ததாகவும், அணிகள் இணைந்த பின்னர் மக்களிடம் கட்சிக்கு வரவேற்பு இல்லை எனவும் தெரிவித்த அவர், கடந்த ஆண்டு மக்கள் சசிகலா குடும்பத்தை வெறுத்தனர். ஆனால் மேலூர் கூட்டத்தில் தினகரனுக்கு கூட்டம் கூடுகின்றது எனவும் தெரிவித்தார். அதிமுக பா.ஜ.கவின் கைப்பாவையாகி விட்டது எனவும் , இந்த ஆட்சியை கடைசி வரைக்கும் ஓட்டி, தங்களை வளப்படுத்தி செட்டில் ஆகவே ஓ.பி.எஸ் , இ.பி.எஸ் இருவரும் பார்க்கின்றனர் எனவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் அதிமுக ஏன் இதுவரை நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பிய அவர் , அதிமுக தன் நிலையை ஆராய்ந்து பார்க்க வேண்டிய நேரம் எனவும் தெரிவித்தார்.
அதிமுகவில் சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் கூட எல்லை மீறி பேசுகின்றனர், அடித்துக்கொள்கின்றனர். வேணுகோபால் எம்.பி கட்சி சொல்லாமல் கருத்து சொல்கின்றார் அவர்கள் மீது எல்லாம் நடவடிக்கை எடுப்பதில்லை என தெரிவித்த அவர், காவிரி விவகாரம் தொடர்பாக ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்ததைப்போல ஓ.பி.எஸ் இ.பி.எஸ் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார்.
எச்.ராஜா, சுப்பிரமணியசாமி போன்றோர் கட்சியையும், அதிமுகவினரையும் இழிவாக பேசுகின்றனர்.அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பிய அவர் , சசிகலா கூட இணைந்து விடுவதற்கான முயற்சியாக கூட இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.டெல்லி உத்திரவினை செயல்படுத்த வேண்டும் என்பதற்காக கட்சியில் இருந்து நீக்கி இருக்கின்றனர் என தெரிவித்த அவர், எடப்பாடி பழனிச்சாமி மீது தங்கதமிழ் செல்வன், வெற்றிவேல் வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள , தகவல்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்டால் அவர் கடைசி வரை கொடுக்கவில்லை எனவும் ,கடைசியில் விவாத நிகழ்ச்சியே நடக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
ஓ.பி.எஸ் இ.பி.எஸ் இடையே எந்த மோதலும் கிடையாது எனவும் அவர்கள் தங்கள் ஆதரவாளர்களை தக்க வைக்க அவர்கள் முயல்கின்றனர் எனவும் பல சீனியர்கள் தங்கள் நிலையை விட்டுக்கொடுத்துள்ளனர் எனவும் தெரிவித்த அவர், சீனியர்களின் உழைப்பு, தியாகத்தால் எடப்பாடி பழனிச்சாமியை தலைவராக உருவாக்கி இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார். ஓ.பன்னீர் செல்வம் மோடி சொல்லியதன் பேரில் இணைந்தேன் என்கின்றார், சசிகலா ராஜினாமா கடிதம் கேட்டதால் கொடுத்தேன் என்கின்றார் , ஒ.பி.எஸ் அவர்களுக்கு சொந்த அறிவோ இல்லையா? எனவும் பழனிச்சாமி கேள்வி எழுப்பினார் .