கரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு சில தளர்வுகளை கொடுத்திருக்கிறது. இதையடுத்து வரும் மே 7ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தடை செய்யப்படாத பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறக்கப்படும் எனவும், மதுக்கடைகளில் ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது. 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆந்திரா, கர்நாடகாவில் மே 4ஆம் தேதி மதுபானக் கடைகள் திறந்தபோது அதிகளவில் மதுபான பிரியர்கள் குவிந்தனர். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டால் அதேபோன்று கூட்ட நெரிசல் ஏற்படும், நோய் தொற்று அதிகமாகும் என்று எதிர்க்கட்சியினர் எச்சரித்தனர்.
டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது என பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு வருவதால், டாஸ்மாக் கடைகளில் பாதுகாப்புக்காகவும் மதுபானம் வாங்க வருபவர்களை சமூக இடைவெளியை கடைபிடிக்க வைப்பதற்காகவும் ஒவ்வொரு டாஸ்மாக் கடை முன்பும் நான்கு போலீசார் மற்றும் ஊர்காவல் படையை சேர்ந்த இரண்டு பேர் உள்பட 8 பேர் பணியில் இருக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு போடப்பட்டுள்ளதாம்.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய ஒரு போலீஸ் அதிகாரி, ''டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே நாங்கள் வந்துவிட வேண்டுமாம். மதுபானம் வாங்க வருபவர்களுக்கு டோக்கன் கொடுக்கணும். அவர்களை 6 அடி இடைவெளி விட்டு நிற்க சொல்லணும். அதிகமா கூட்டம் கூடினால், சிறிது நேரம் கழிச்சி வாங்கன்னு சொல்லி அந்த இடத்தை விட்டு அவர்களை அப்புறப்படுத்தணும். ஒரு நபர் ஒரு புல் மட்டுமே வாங்க வேண்டும். அதனை நான்கு குவாட்டராகவோ, இரண்டு ஆப் பாட்டிலாகவோ, இல்லை ஒரே புல் பாட்டிலாகவோ வாங்கலாம். அதற்கு மேல் வாங்கக் கூடாது. அதனையும் நாங்கள் கண்காணிக்கணும்.
இதைவிட இன்னொன்று அங்கேயே யாராவது திடீரென்று குடிக்கப்போனால் அவர்களை தடுக்கணும். அப்படி குடித்தால் அவர்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும். 40 நாளா குடிக்காம இருந்து திடீரென ராவா குடிச்சு ஏதாவது விபரீதம் ஆனா பிரச்சனை வந்துவிடும் என்பதால் தண்ணீரும் பாதுகாப்புக்கு நிக்கிற போலீசார்தான் தரணுமாம். டம்ளர் மட்டும்தாங்க நாங்க விற்கவில்லை. டாஸ்மாக் விற்பனையாளர்கள் பணத்தை வாங்குவாங்க, பாட்டிலை கொடுப்பாங்க. அவ்வளவுதான் அவுங்க வேலை. நாங்க போலீஸ்காரங்களா? இல்ல பார்ல வேலை செய்ய சப்ளையரான்னு தெரியலங்க'' என்றார் வருத்தத்துடன்.
-மகேஷ்