
அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் அவசர செயற்குழு கூட்டத்தை வரும் 22 ஆம் தேதி நடத்தவுள்ளார். இந்த கூட்டத்தில் பாஜகவுடன் ஏன் கூட்டணி என்பதனை விளக்கவிருக்கிறாராம். மேலும் கூட்டத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் உள்ள பிரச்சனைக் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும்(ஓபிஎஸ் மற்றும் அவரது ஆட்கள் நீங்கலாக) கடந்த 16 ஆம் தேதி விருந்து வைக்கத் திட்டமிட்டு, அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திடீரென அந்த விருந்து வைக்கும் நிகழ்வு வரும் 23 ஆம் தேதி மாற்றப்பட்டது. ஆனால், எதனால் இந்த திடீர் மாற்றம் என்று எம்.எல்.ஏ.க்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இதுகுறித்து நாம் விசாரித்தபோது, “சசிகலா, ஓபிஎஸ், தினகரனை கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொள்ள முடியாது என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார். இதனால், மேற்கண்ட மூவரும் ஏக கடுப்பில் இருக்கின்றனர். இந்த நிலையில், இனியும் பொறுக்க வேண்டாம் என நினைக்கும் சசிகலா, அதிமுகவின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பலரிடமும் அவரே தொடர்புகொண்டு பேசி தனக்கு சாதகமாக வளைத்துள்ளாராம். காரணம், அதிமுக சின்னம் தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் 28-ந்தேதி வரவிருக்கிறது. அன்றைய தினம் அனைவரையும் நேரில் ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது எம்.எல்.ஏ.க்களும் பொதுக்குழு உறுப்பினர்களும் தன்னைத்தான் ஆதரிக்கிறார்கள் என சசிகலா தரப்பில் சொல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
சசிகலாவின் இந்த மூவை அறிந்த எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சியாகியிருக்கிறார். சசிகலாவின் இந்த திட்டத்தை உடைக்கும் வகையில், எம்.எல்.ஏ.க்களையும் பொதுக்குழு உறுப்பினர்களையும் தன் வசம் வசப்படுத்திக் கொள்ளவே எம்.எல்.ஏ.க்களுக்கு ட்ரீட் தருகிறாராம் எடப்பாடி பழனிசாமி. இந்த ட்ரீட் என்பது வெறும் விருந்து நிகழ்ச்சியாக இல்லாமல், சீக்ரெட்டாக பணமுடிப்பு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் சசிகலா, ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமாக உருவாவதற்கு அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு ஒரு காரணமாக இருந்துவிடக்கூடாது என்பதை யோசித்துத்தான் இந்த விருந்து வைபவத்தையே திட்டமிட்டிருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.
தேர்தல் ஆணையத்தில் உள்ள வழக்கு விசாரணை 22-ந்தேதி வருவதாக இருந்ததால் விருந்து வைபவத்தை 16-ந்தேதி வைத்திருந்தாராம். ஆனால், 28-ந் தேதிதான் வழக்கு வரவிருப்பதால் விருந்து வைபவத்தை 23 ஆம் தேதிக்கு எடப்பாடி பழனிசாமி மாற்றிவிட்டாராம்” என்று விவரிக்கிறார்கள் அதிமுகவினர்.