
தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி, மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்த வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா பெரும்பான்மை வாக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவையிலும் நிறைவேறியது. அதனை தொடர்ந்து, இந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்ததை அடுத்து, வக்ஃப் வாரிய புதிய சட்டம் கடந்த 8ஆம் தேதி நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.
இந்த சட்டத்திற்கு எதிர்த்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் அதே சூழ்நிலையில், 100க்கும் மேற்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதே போல், திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இந்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது.
வக்ஃப் சட்டம் குறித்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வு முன்பு இன்று (16-04-25) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘இந்து அறநிலையத்துறையில் சட்டத்தின்படி இந்துக்கள் மட்டுமே நிர்வாகிகளாக நியமிக்கப்படுகிறார்கள். அப்படி இருக்கும் போது, வக்ஃப் சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை பின்பற்றப்படுகிறது? இனிமேல் இஸ்லாமியர்களை இந்து அறக்கட்டளை மற்றும் வாரியங்களில் நியமிப்பீர்களா?. இதற்கு வெளிப்படையாக மத்திய அரசு பதில் சொல்ல வேண்டும். பயனாளிகள் அடிப்படையிலான வக்ஃப் சொத்துக்களை நீக்கினால் அது பிரச்சனையாக இருக்கும்’ என மத்திய அரசு சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் சரமாரி கேள்வி எழுப்பினர். இதை தொடர்ந்து, வக்ஃப் சட்டம் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம் நடைபெற்று வருகின்றன.