
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியில் உள்ள சேக்கிழார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனத்துறை சார்பில் ‘கலைஞரின் கைனைத் திட்டம்’ துவக்கவிழா இன்று (19-04-25) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அந்த திட்டத்தை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு கடன் உதவிகளுக்கான ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “கலைஞரின் கைவினைத் திட்டம் என்பது சமூக நீதியை, மனித நீதியை நிலைநாட்டக்கூடிய திட்டம். ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க அரசு, கடந்த 2023ஆம் ஆண்டு விஸ்வகர்மா திட்டத்தை கொண்டு வந்தது. 18 வகையான கைவினை கலைஞர்களுக்கு திறன் பயிற்சி தந்து ரூ.3 லட்சம் வரை கடன் உதவி வழங்கக்கூடிய திட்டம் என்று சொன்னார்கள். எந்த திட்டமாக இருந்தாலும் சமூக நீதியை, சமுத்துவத்தை நிலைநாட்டக்கூடிய நோக்கத்தோடு இருக்க வேண்டும் என்பது தான் நமது நோக்கம். ஆனால், அந்த விஸ்வகர்மா திட்டம், அப்படியான திட்டம் இல்லை. அந்த திட்டத்தின் கீழ் ஒருவர் கடன் பெற வேண்டுமென்றால், விண்ணப்பதாரரின் குடும்பம் காலம் காலமாக செய்து வருகிற தொழிலை தான் அவரும் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. இது சாதிய பாகுபாடுகளை, குலதொழில் முறையை ஊக்குவிக்கிறது என்று நாம் கடுமையாக அந்த திட்டத்தை எதிர்த்தோம்.
விண்ணப்பதாரரின் குறைந்தபட்சம் வயது 18 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்ததை கண்டு நான் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன். 18 வயது என்பது ஒரு மாணவர் உயர் கல்வியில் சேர வேண்டிய வயதா? இல்லை குடும்ப தொழிலை செய்ய வேண்டும் என்று தள்ளிவிடுகிற வயதா? படிப்பை விட்டு வெளியே போகும் மாணவர்களையும் மீண்டும் கல்விசாலையில் அழைத்து வருவது தான் ஒரு அரசினுடைய கடமை. திராவிட மாடல் அரசின் திட்டத்தால் ஒவ்வொரு மாணவர்களும், உயர்கல்விக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்று நாம் பாடுபட்டு கொண்டிருக்கிறோம். ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு குலதொழிலை ஊக்குவிக்க பாடுபடுகிறது. சாதிய வேறுபாடுகள் நிறைந்த இந்திய சமூகத்தில், இது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று யோசியுங்கள். மனசாட்சி ஒருவரால் இதை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?. அதுவும் 1950களில் குலதொழில் திட்டத்தை எதிர்த்து களம் நின்ற தமிழ்நாடு இதை அனுமதிக்குமா?.
அந்த உணர்வோடு தான் தமிழ்நாடு அரசு, இந்த திட்டத்தை செயல்படுத்த மூன்று முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினேன். விண்ணப்பதாரரின் குடும்பம் பாரம்பரிய தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற கட்டாய நிபந்தனையை நீக்கி தகுதியான தொழிலையும் யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை மாற்ற வேண்டும் என்றும், விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது வரம்ப 18லிருந்து 35ஆக உயர்த்த வேண்டும் என்றும், கிராமப்புறங்களில் பயனாளிகளை சரிபார்க்கும் பொறுப்பை கிராம பஞ்சாயத்து தலைவரிடமிருந்து கிராம நிர்வாக அலுவலருக்கு மாற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், இந்த முக்கியமான மூணு மாறுதல்களை ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ள மறுத்து எந்த திருத்தமும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அதனால்தான், பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய வடிவத்தில தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என்று ஒன்றியத்தில் இருக்கக்கூடிய எம்எஸ்எம்இ துறையினுடைய அமைச்சருக்கு எழுத்துப்பூர்வமாக இதை நாங்க தெரிவித்தோம். அதே நேரத்தில கைவினை கலைஞர்களுடைய வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதற்காக சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டாத ஒரு திட்டத்தை உருவாக்க நாங்க முடிவு செய்தோம். அதன்படி உருவானதுதான் இந்த கலைஞர் கைவினைத் திட்டம்.

ஒன்றிய அரசினுடைய விஸ்வகர்மா திட்டத்தில 18 தொழில்கள் தான் இருக்கிறது. ஆனா நமது கலைஞர் கைவினைத் திட்டத்தில் 25 வகையான தொழில்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசு திட்டத்தில் விண்ணப்பதாரர், அவருடைய குடும்ப தொழிலை மட்டும்தான் பார்க்க முடியும். ஆனா நமது திட்டத்தில் விரும்பி எந்த தொழிலையும் யார் வேண்டுமானாலும் செய்யலாம். கலைஞர் கைவினைத் திட்டத்தில் விண்ணப்பிக்க குறைந்தப்பட்ச வயசு 35ஆக இருக்க வேண்டும் என்று நிர்ணயித்திருக்கிறோம். அதனால், கல்லூரிக்கு போகிற வயதில் குடும்ப தொழிலை பார்த்தா போதும் என்று எந்த மாணவரும் நினைக்காமல் இருப்பதை உறுதி செய்திருக்கிறோம். இந்த திட்டத்தில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை மானியத்தோடு கடன் வழங்கப்படுகிறது. விஸ்வகர்மா திட்டத்தில் மானியம் கிடையாது. இதுவரை 24,907 விண்ணப்பங்கள் வந்துள்ளது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து வகை கைவினை கலைஞர்களுக்கும் அதிகாரம் அளிக்கக்கூடிய வகையில், யாரையும் விலக்காமல், சமூக பாகுபாடு பார்க்காமல் உருவாக்கப்பட்டிருக்கும் ஆர்வமான கைவினை கலைஞர்கள் விரும்பிய தொழிலை செய்யலாம் என்கிற அடிப்படையில் தான் இந்த திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். ஒரு காலத்தில அப்பா பார்த்த தொழிலைதான் பிள்ளையும் பார்க்க வேண்டும் என்ற குலத்தொழில் முறை இருந்தது. அதற்கு எதிராக தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் போராடினார்கள். பெருந்தலைவர் காமராஜர் தான் அந்த முறையை திரும்ப பெற்றார். இத்தனை ஆண்டுகளாகியும் சிலருடைய மனதில் இருந்த அந்த பழமைவாதம் போகவில்லை என்பதன் அடையாளம் தான் விஸ்வகர்மா திட்டம். அதை எதிர்த்து நம்ம திராவிட மாடல் அரசு, சமூகநீதி திட்டமாக கலைஞர் கைவினைத் திட்டத்தை உருவாக்கி இருக்கிறது. இதுதான் காலத்தினுடைய வெற்றி, இதுதான் திராவிட இயக்கத்தினுடைய வெற்றி. போராடும் இடத்திலிருந்து மாற்று திட்டத்தை உருவாக்கும் வளர்ச்சியை அடைந்திருக்கிறோம். இது ஒரு கட்சியின் ஆட்சி அல்ல, ஒரு கொள்கையின் ஆட்சி” எனப் பேசினார்.