“பா.ஜ.க அரசு கொண்டு வரும் மக்கள் விரோத - ஜனநாயக விரோத - சர்வாதிகார சட்டங்களைப் பார்த்துக்கொண்டு கைகட்டி, வாய்பொத்திக் கிடக்க நாங்கள் எடப்பாடி கூட்டம் அல்ல, பெரியாரின் கூட்டம், அண்ணாவின் கூட்டம், கலைஞரின் கூட்டம். பா.ஜ.க. அரசு கொண்டு வந்திருப்பது குடியுரிமைச் சட்டமா? அல்லது குழிபறிக்கும் சட்டமா? எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி, தற்போது ‘தமிழின துரோக ஆட்சியாகவும், அதற்கான கூட்டணியாகவும் உருவெடுத்துள்ளது என மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் கடும் கண்டனம் தெரிவித்து பேசினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
‘குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் சிறுபான்மையினர் - ஈழத்தமிழர்களுக்கு அநீதி இழைத்துள்ள மத்திய பா.ஜ.க. - மாநில அ.தி.மு.க. அரசுகளைக் கண்டித்து’ காஞ்சிபுரத்தில் இன்று (17-12-2019) காலை நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய மு.க.ஸ்டாலின்,
மத்தியில் ஆட்சி நடத்திவரும் பா.ஜ.க அரசு நிறைவேற்றியிருக்கும் இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டத்தை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த குடியுரிமைச் சட்டம் கடந்த 11-ம் தேதி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன், கடந்த 13-ம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை அமைப்புகளான இளைஞர் அணியும் மாணவர் அணியும் ஒன்று சேர்ந்து தமிழகம் முழுவதும் தலைமைக் கழகத்தின் அனுமதியோடு மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறார்கள்.
தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காலையில் கைது செய்து மாலையில் விடுதலை செய்துள்ளார்கள். சிறையில் இடம் இல்லை என்ற நிலை வந்த காரணத்தால் அவர்களை விடுதலை செய்திருக்கிறார்கள்.
பல வழக்குகள் அவர்கள் மீது போடப்பட்டுள்ளது. அந்த வழக்குகளைக் கண்டு, அஞ்சி, நடுங்கி எடப்பாடி போல் ஒடுங்கி விடுகிற இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் அல்ல!
அடுத்த கட்டமாக, தமிழகத்தில் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 65 மாவட்டங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திடவேண்டும் என தலைமைக் கழகம் சார்பில் அறிவுறுத்தி இருக்கிறோம். அந்த அடிப்படையில் காஞ்சிபுரத்தில், காஞ்சிபுரம் மாவட்டக் கழகம் சார்பில், இந்த ஆர்ப்பாட்டத்தில் நம்மை ஆளாக்கிய நம்முடைய இதய மன்னன், வங்க கடற்கரையில் ஆறடி சந்தனப் பேழையில் உறங்கியும், உறங்காமலும் உறங்கிக்கொண்டிருக்கிற நம்முடைய அறிவுலக மேதை அறிஞர் அண்ணா பிறந்த இந்த மண்ணில், இந்த காஞ்சி நகரத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நானும் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன்.
மத்தியில் ஓர் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. அதனை பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி என்று சொல்கிறோம். ஆனால் அது பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி அல்ல; உண்மையில் அது மக்களுக்கு பாதகம் செய்யும் ஆட்சியாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது.
2014-ஆம் ஆண்டு மத்தியில் மோடி அவர்கள் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி உதயம் ஆனது. உதயமான பாஜக ஆட்சி 5 வருடம் இந்தியாவை முழுமையாக ஆண்டுவிட்டு, அதற்கு அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. சாதாரண வெற்றி அல்ல; மிக பெரும்பான்மையான நிலையில், மிருக பலம் என்று சொல்வார்களே, அந்த பலத்தோடு மீண்டும் மோடியின் தலைமையில் பா.ஜ.க.,வின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகள் அவர்கள்தான் ஆளப்போகிறார்கள். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால், இந்திய நாட்டு மக்களை ஆளுகிறார்களா? மக்களுக்காக ஆட்சி நடத்துகிறார்களா? என்று பார்த்தால் இல்லை என்பதைத்தான் நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது. காரணம் இந்திய நாட்டு மக்களைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. இந்திய நாட்டு மக்களை பற்றி கவலைப்பட்டிருந்தால், இந்நேரம் பொருளாதாரத்தை, வேளாண்மைத் துறையை வளர்த்திருப்பார்கள். ஏற்றுமதியை பெருக்கியிருப்பார்கள். புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி இருப்பார்கள். பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி இருப்பார்கள். அவர்கள் எதையும் செய்யவில்லை. செய்ய முடியவில்லை. அதனால் எதையும் சொல்ல முடியாத நிலையில், ஒரு கொடுமையான ஆட்சி மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பிரதமர் மோடி அவர்கள் கடந்தகால தேர்தல்களில் அவர் அளித்த வாக்குறுதி, வேலையில்லாத இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் எனச் சொன்னார். விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்கு உயர்த்தி காட்டுவேன் என பிரதமர் சொன்னார். செய்தாரா? இல்லை!
அதனால் என்ன செய்தார்கள், என்ன செய்யப்போகிறார்கள் என தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறோம். நாட்டை குட்டிச்சுவராக்கும் வேலையை மட்டும் செய்து வருகிறார்கள்.
மக்களை துன்பத்திற்கு ஆளாக்குகிறார்கள். உதாரணத்திற்கு, காஷ்மீரில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்தார்கள். முத்தலாக் சட்டத்தை கொண்டு வந்தார்கள். அண்மையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அவசரமாக கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், இந்தியாவை வாழவைப்பது, மோடி தலைமையில் இருக்கும் பா.ஜ.க. ஆட்சியின் நோக்கம் அல்ல; அவர்களுடைய நோக்கம் எல்லாம், இஸ்லாமியர்களை நசுக்குவதுதான்.
சிறுபான்மையினராக இருக்கும் அந்த மக்களை கொடுமைப்படுத்துவதுதான் பா.ஜ.க.வின் நோக்கமாக இருந்து கொண்டிருக்கிறது.
இந்தியா என்பது பல இனங்களைச் சார்ந்தவர்கள்; பல மொழிகளைப் பேசுபவர்கள்; பல்வேறு மத நம்பிக்கைகளைக் கொண்ட நாம் அனைவரும் ஒற்றுமையுடன் வாழும் நாடு.
நாம் பல 100 ஆண்டுகளாக எந்த வேற்றுமையும் இல்லாமல் ஒற்றுமையோடு வாழ்ந்து வருகிறோம். அந்த ஒற்றுமையில் நஞ்சை கலக்கும் ஆட்சியாக பா.ஜ.க.,வின் ஆட்சி நடைபெற்று வருகிறது என இந்த கண்டன கூட்டத்தில் பகிரங்கமாக குற்றம் சாட்ட விரும்புகிறேன்.
அவசர அவசரமாக குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளார்கள். குடியுரிமை சட்டம் என்றாலே அதன் உண்மையான பொருள் வெளிப்படையாக தெரியும். குடிகளுக்கு உரிமை வழங்கும் சட்டம் என்று அதற்கு பொருள். குடியுரிமைச் சட்டம் என்று பெயர் வைத்துக்கொண்டு குடிகளின் உரிமையை இன்றைக்கு பா.ஜ.க. ஆட்சி பறித்துக் கொண்டிருக்கிறது.
அதனால்தான் இது குடியுரிமைச் சட்டமா? அல்லது குழிபறிக்கும் சட்டமா? என்று நான் இந்த கூட்டத்தின் மூலமாக கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
குடிமக்கள் என்றால் இஸ்லாமியர்களும், ஈழத்தமிழ் மக்களும் குடிமக்கள் இல்லையா? எதற்காக இந்த ஓரவஞ்சனை?
“ஒரு கண்ணில் வெண்ணெயும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும்” என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.
இஸ்லாமியர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்? ஈழத்தமிழினம் மட்டும் பாவம் செய்த இனமா?
இதை கேட்பது எங்களது உரிமை.
பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக மக்கள் விரோத - ஜனநாயக விரோத - சர்வாதிகார சட்டங்களை வரிசையாக அரங்கேற்றுவீர்கள் என்றால், அதைப் பார்த்துக் கொண்டு கைகட்டி, வாய்பொத்தி இருக்க நாங்கள் எடப்பாடி கூட்டம் அல்ல; இது தந்தை பெரியாரின் கூட்டம்! அறிஞர் அண்ணாவின் கூட்டம்! தலைவர் கலைஞரின் கூட்டம்!
மத்திய பா.ஜ.க. அரசு கவனம் செலுத்த வேண்டிய ஏராளமான பிரச்சினைகள் எத்தனையோ இருக்கிறது. அதில் கவனம் செலுத்துவதில்லை. திடீரென்று குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு கொண்டுவந்து நிறைவேற்றி இருக்கிறது.
இந்தச் சட்டம், மக்கள் விரோத சட்டம் என்பதால்தான் நாடாளுமன்றத்தில் நாம் குரல் கொடுத்தோம். மாநிலங்களவையில் எதிர்த்து பேசி உள்ளோம். எதிர்த்து ஓட்டு போட்டுள்ளோம் என்பதை மறந்துவிடக் கூடாது.
அமெரிக்காவுக்கு சென்று மோடி அவர்கள் திருக்குறளை மேற்கோள் காட்டுகிறார். ஐ.நா.,வில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என அழகோடு பேசுகிறார்.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றால் அனைவரும் சமம். இனம், மதம் கடந்து அனைவரும் உறவினர்கள் என்பதுதானே பொருள். அங்கே அப்படிப் பேசிவிட்டு, இந்தியாவில் இப்படி சட்டம் இயற்றுவதா என தம்பி தயாநிதி கேட்டார்.
மாநிலங்களவையில் திருச்சி சிவா பேசிய பேச்சில் இந்த சட்டத்திருத்தம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது எனவே எதிர்த்தே தீருவோம் என பேசினார்; அதையெல்லாம் நீங்கள் தொலைக்காட்சி, பத்திரிகைகளில் பார்த்திருப்பீர்கள். அண்ணா அறிவாலயத்தில் நானும் கழக முன்னோடிகளும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது நம்மை அறியாமலேயே நம்முடைய உடலில் ஓர் உணர்ச்சி, மகிழ்ச்சி ஏற்பட்டது. இவ்வளவு தெளிவாக நம்முடைய கொள்கைகளை எடுத்து வைக்கிறார்களே என்பதனால் அந்த மகிழ்ச்சி. அதே சமயம் ஒரு கவலையும் ஏற்பட்டது. இந்நேரத்தில் இதை கலைஞர் பார்த்திருந்தால் துள்ளிக் குதித்து எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருப்பார் என எண்ணிப் பார்த்தேன்.
தமிழர்களுக்கு ஒரு தீங்கு வந்தால் தி.மு.கழகம் சும்மா இருக்காது என கர்ஜித்தார்கள்! சிறுபான்மையினருக்கு ஒரு ஆபத்து வந்தால் அதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம், சீறிப்பாய்வோம்! என தி.மு.கழக உறுப்பினர்கள் பேசினார்கள்.
நான் எளிமையான 2 கேள்விகளை மட்டும் கேட்க விரும்புகிறேன்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்திலிருந்து பிறமதத்தினர் வந்தால் ஏற்றுக் கொள்வோம் என்று சொல்கிறீர்களே? இஸ்லாமியர்களை மட்டும் புறக்கணிப்பதற்கு என்ன காரணம்? இது என்னுடைய முதல் கேள்வி.
இரண்டாவது கேள்வி, அண்டை நாடுகளில் இருந்து வருவோரது நன்மைக்காக சட்டம் கொண்டு வந்ததாக சொல்கிறீர்களே, இலங்கை அண்டை நாடு இல்லையா? அங்குள்ள ஈழத்தமிழர்களை மட்டும் புறக்கணிப்பதற்கு என்ன காரணம்?
இதற்கு மத்திய அரசாங்கத்தால் பதில் சொல்ல முடிந்ததா? இதுவரை பதில் சொன்னார்களா? அனைவருக்கும் குடியுரிமை என்றால், நான் அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன், ஒருபோதும் தி.மு.க. அதனை எதிர்க்காது. மனப்பூர்வமாக ஆதரிப்போம்.
மதத்தால் மக்களைப் பிளவு படுத்தி பார்ப்பதால்தான் இந்த சட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம். இந்திய அரசை மதச்சார்பற்ற அரசு என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. அதன்படி பார்த்தால் மதத்தை அடிப்படையாகக் கொண்டு எந்த சட்டத்தையும் கொண்டு வர முடியாது.
ஆனால், அதைத்தான் மோடி தலைமையில் இருக்கக்கூடிய பா.ஜ.க. அரசு செய்து கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே எதிராக பா.ஜ.க. அரசு இருந்து கொண்டிருக்கிறது என்று எண்ணிக் கொண்டிருந்தோம். தற்போது இந்த சட்டத்தின்மூலம் ஈழத்தமிழர்களுக்கும் நாங்கள் எதிரிதான் என்று வெளிப்படையாக காட்டிவிட்டார்களா இல்லையா?
ஈழத்தமிழர்கள் அந்த நாட்டில் வாழ முடியாமல் தமிழகம் தப்பி வந்து கடந்த 30 ஆண்டுகளாக அகதிகளாக முகாம்களிலும் வெளியூர்களிலும், வெளிப்பகுதிகளிலும் தங்கி இருக்கிறார்கள்.
இவர்களது அடிப்படை உரிமை பற்றி மத்திய பா.ஜ.க. அரசு கவலைப்படவில்லை. ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது. தமிழர்கள் இந்த அரசுக்கு செய்த துரோகம் என்ன என்பதுதான் என்னுடைய கேள்வி.
மற்ற அண்டை நாட்டை சேர்ந்த இந்துக்கள் வரலாம் என்றால் ஈழத்தில் இருக்கும் தமிழர்களை இந்துக்களாக மத்திய பா.ஜ.க. அரசு நினைக்கவில்லையா? என்பது தான் நான் வைக்கிற கேள்வி.
இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும்போது உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷா பேசும்போது குறிப்பிட்டு சொன்னார். இலங்கைத் தமிழர்கள் 4,61,000 பேருக்கு முதலில் குடியுரிமை வழங்கப்பட்டதாகவும்; பிறகு 1,50,000 பேர் விண்ணப்பித்ததில் 75,000 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது முழுக்க முழுக்க அபாண்டமான, தவறான தகவல் என்பதை நான் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறேன். அவர் சொல்வது யாரைத் தெரியுமா? இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வேலைக்கு சென்ற வம்சாவளித் தமிழர்கள் அவர்கள்.
அதாவது இந்தியத் தமிழர்களுக்கு இலங்கையில் குடியுரிமை பறிக்கப்பட்ட நேரத்தில், இந்தியாவில் அன்று பிரதமாக இருந்த லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் அதற்கு பின்னர் பிரதமராக இருந்த அம்மையார் இந்திரா காந்தி அவர்கள் காலத்தில் குடியுரிமை வழங்கப்பட்டது. எனவே இதை பற்றி அமித் ஷா அவர்கள் பேசி, அதிலே தனக்கு பெருமை என்று பறைசாற்றிக் கொள்ள அவருக்கு எந்த தகுதியும் கிடையாது. இதுதான் உண்மை.
கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தில் அகதிகளாக தங்கியுள்ள ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை கேட்கிறோம். அதற்காகத்தான் இங்கே போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
புலம் பெயர்ந்து வந்திருக்கும் ஈழத்தமிழர் நல்வாழ்வுக்காக நம்முடைய தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில், தி.மு.க. ஆட்சியின் சார்பில் எத்தனையோ திட்டங்களை தீட்டி தந்துள்ளார். குறிப்பாக தமிழகத்தில் வசிக்கும் ரேசன் அட்டை தாரர்களுக்கு தரப்படும் அனைத்து சலுகைகளும் ஈழத்தமிழர்களுக்கு வழங்கியவர் நம்முடைய தலைவர் கலைஞர். அவர்களுக்கு தேவைப்படும் உதவித்தொகையை வழங்கியவர் கலைஞர் அவர்கள். தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் அவர்களுக்கும் போய் ச் சேரவேண்டும் என்ற சட்டத்தை போட்டவர் நம்முடைய தலைவர் கலைஞர்.
அவர்களின் பிள்ளைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாவிட்டாலும் பள்ளிகளில் சேர்க்கலாம் என உத்தரவிட்டவர் கலைஞர் அவர்கள். இலவச கல்வி தந்தவர் நம்முடைய தலைவர் கலைஞர். உயர்கல்வியில் இட ஒதுக்கீடு உருவாக்கி தந்தவர் கலைஞர் அவர்கள்.
இதையெல்லாம் நான் பட்டியலிட்டு சொல்வதற்கு என்ன காரணம். இப்போதுள்ள எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அரசு ஈழத்தமிழர்களுக்கு மாபெரும் துரோகம் செய்து வருகிறது. குடியுரிமை சட்டத்தை ஆதரிப்பதன் மூலம் தமிழினத்துக்கு பச்சைத் துரோகத்தை எடப்பாடி அரசு செய்திருக்கிறது. குடியுரிமை சட்டம் மக்களவையில் தாக்கல் ஆனபோது அ.தி.மு.க. உறுப்பினர் அதாவது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வதின் மகன், சட்டத்தை ஆதரித்து வாக்களித்துள்ளாரா இல்லையா? பேசக்கூட இல்லை. ஆதரித்து வாக்களித்து உள்ளார்.
மாநிலங்களவையில் தாக்கல் ஆனபோதும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் 11 பேரும் ஆதரித்து வாக்களித்துள்ளார்கள். மக்களவையிலாவது பா.ஜ.க.,வுக்கு பெரும்பான்மை இருக்கிறது. மாநிலங்களவையில் பெரும்பான்மை கிடையாது.
11 அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்ததால்தான் மசோதா மாநிலங்களையில் நிறைவேறியது. எதிர்த்து ஓட்டு போட்டிருந்தால் இந்த கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் வந்திருக்காது. வடமாநிலங்களில் வன்முறை நிகழ்ந்திருக்காது. இந்தியா முழுவதும் போராட்டம் கொழுந்துவிட்டு எரிவதற்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள்தான் காரணம். பற்றி எரிகிறது இந்தியா. மத்திய பா.ஜ.க.வுக்குத்தான் ஈழத்தமிழர்களைப் பற்றி கவலை இல்லை என்றால் அ.தி.மு.க. அரசுக்கும் கவலை இல்லை.
அதற்கு காரணம் தங்களது கொள்ளை ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காகவே ஈழத்தமிழர் நலனை பலிகொடுத்து விட்டார் எடப்பாடி அவர்கள்! மக்களிடத்தில் சுரண்டிக்கொண்டிருக்கும் எடப்பாடி தலைமையிலான இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பது மட்டுமே அவர்களது நோக்கம். இப்படி துரோகம் செய்வது எடப்பாடிக்கு புதிதல்ல; அவரது குணமே துரோகம் செய்வதுதான்!
துரோகம் செய்துதானே முதல்வர் பதவியில் அமர்ந்துள்ளார். இது நம்மை விட அ.தி.மு.க.,வுக்கு நன்றாக தெரியும்.
நீட் தேர்வில் விலக்கு வாங்கித் தருவோம் என்று சொன்னார்கள். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இந்த வாக்குறுதி உள்ளது. அண்மையில் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். தி.மு.க. எதிர்க்கவில்லை. தி.மு.க. ஆதரித்து நிறைவேற்றியது.
சட்டத்துறை அமைச்சர், சி.வி.சண்முகம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் எத்தனை முறை உறுதிமொழி கொடுத்திருக்கிறார்கள்; சட்டமன்றத்தில் நாங்கள் எதிர்ப்போம் என வீராவேசம் பேசினார்கள். உங்களது வீராவேசத்தை மோடியின் கால்களில் வைத்து விட்டீர்களா? நீட்டிற்கு விலக்கு வாங்கித் தருவோம் என கூறிவிட்டு துரோகம் செய்தவர்தான் எடப்பாடி பழனிசாமி அவர்கள்.
ஜி.எஸ்.டி., இந்தித் திணிப்பு, மாநில உரிமைகள், முத்தலாக் சட்டம் என அனைத்து விஷயத்திலும் துரோகம் செய்தவர்தான் இந்த எடப்பாடி பழனிசாமி. இப்படி அவரது துரோக வரலாறு நீளமானது.
அவருக்கு உரிமைக்கு போராடுவதற்குத்தான் சொல்லித்தர வேண்டுமே தவிர; துரோகம் செய்வதற்கு யாரும் சொல்லித்தர வேண்டியது இல்லை. அத்தகைய துரோகத்தை இஸ்லாமியர்களுக்கு, சிறுபான்மையினருக்கு, இலங்கைத் தமிழர்களுக்கு செய்துள்ளார்.
ஈழத்தமிழர்கள் வாழ்க்கை பறிபோனாலும் பரவாயில்லை என அவர்களை காவு கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி அவர்கள்.
இதுவரை இந்த ஆட்சியை கமிஷன், கரப்ஷன், கலக்ஷென் என விமர்சித்து வந்தோம். அதை தொடர்ந்து கொலைகார ஆட்சி, கொள்ளைக்கார ஆட்சி என்று சொல்லிக் கோண்டிருந்தோம். ஆனால் தற்போது சொல்கிறேன். ‘தமிழின துரோக ஆட்சியாக எடப்பாடி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மேடைகளிலும், ஊடகங்களிலும் வக்கனையாக பேசும் எடப்பாடி பழனிசாமி அவர்கள், குடியுரிமை சட்டம் பற்றி வாயைத் திறக்காததற்கு என்ன காரணம்?
தமிழர்களின் உரிமைகளை அடகு வைத்துவிட்டு தமிழக முதலமைச்சர் என்று சொல்லிகொள்வதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு யோக்கியதை அருகதை இருக்கிறதா என்று கேட்கிறேன்.
பா.ஜ.க. அரசு காலால் இட்ட பணிகளை தலையால் செய்யும் அடிமை ஆட்சி இந்த பழனிசாமி ஆட்சி. ஆதலால் தமிழகம் அதலபாதாளத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது.
தமிழகத்துக்கு வரவேண்டிய மிக முக்கியமான வரி, வருவாய்களில் ஒன்று சரக்கு மற்றும் சேவை வரி வருவாய். நாடு முழுக்க ஒரே வரி என்று சொல்லிவிட்டதால், மாநில அரசுக்கு வரவேண்டிய வருவாய் போய்விட்டது. மத்திய அரசு பெற்று மாநில அரசுக்கு தரவேண்டும். ஆனால் ஜி.எஸ்.டி. வருவாய் அதிகமாக இல்லாததால் மாநிலத்துக்கு வழங்க வேண்டிய தொகையை தரமுடியாது என்று மத்திய அரசு தெளிவாக சொல்லிவிட்டது.
இதனைக் கண்டிப்பதற்கு கூட முதுகெலும்பு இல்லாத ஆட்சியாக எடப்பாடி பழனிசாமி ஆட்சி இருக்கிறது. ஜெயலலிதா அம்மையார் உயிருடன் இருந்தவரை இந்த ஜி.எஸ்.டி. சட்டத்தை எதிர்த்தார். அவர் இறந்ததும் மத்திய அரசிடம் மண்டியிட்டு ஆட்சியை அடமானம் வைத்து விட்டார் எடப்பாடி பழனிசாமி.
ஜிஎஸ்டி சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியபோது எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் எதிர்த்தேன். தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்த்தனர். இதனால் தமிழகத்துக்கு மிகப் பெரிய ஆபத்து ஏற்படும், நிதி பற்றாக்குறை ஏற்படும் என்றேன். நான் சொன்னது தான் இன்று நடந்துள்ளது.
2019-20-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் ஜி.எஸ்.டி. மற்றும் இழப்பீடு வகையில் சுமார் 5,900 கோடி ரூபாய்க்கு மேல் நிலுவையில் உள்ளதாக குறிப்பு உள்ளது. அந்தத் தொகையை வாங்க எடுத்த முயற்சிகள் என்ன?
டெல்லி, பஞ்சாப், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், மேற்குவங்கம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள், நிதியமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் மத்திய நிதியமைச்சரை சந்தித்து நிதியை கேட்டிருக்கிறார்கள். அழுத்தம் கொடுத்துள்ளார். சில முதலமைச்சர்கள் நீதிமன்றம் சென்றிருக்கிறார்கள். ஆனால் தமிழக அரசு இதுகுறித்து எடுத்த நடவடிக்கை என்ன? இதற்கு கேள்வியும் கேட்க முடியாது. வழக்கும் போட முடியாது. காரணம் பயந்து கொண்டிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில், வருகிற 19ம் தேதி பிரதமரை சந்திக்க முதல்வர் டெல்லி செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமரின் காலில் பல விஷயங்களுக்காக விழுந்திருக்கிறீர்கள். தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினைக்காக காலில் விழுந்தால் தப்பில்லை. விழுந்து தயவு செய்து இதையாவது கேளுங்கள்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தில் ஈழத்தமிழர்கள், இஸ்லாமியர்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே அவர்களையும் இதில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்க வேண்டும். ஜி.எஸ்.டி. மூலம் தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியை வாதாடி பெற வேண்டும். நீட் தேர்வு விலக்கு போன்ற பல்வேறு தமிழக உரிமைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும்.
செய்வாரா? செய்யமாட்டார். செய்தால் மகிழ்ச்சி. வரவேற்போம். என்ன நடக்கப் போகிறது? ‘எங்க வீட்டுக்காரனும் கச்சேரிக்கு போனான்’ என்பது மாதிரி தலையாட்டிவிட்டு வரப் போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்ததன் மூலம், இது கொத்தடிமை ஆட்சி மட்டுமல்ல; கொத்தடிமை கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் தருமபுரி சார்பில் ஒருவர் போட்டியிட்டாரே? மாற்றம் முன்னேற்றம் டேஷ்… டேஷ்… என்னவானது? அந்த விளம்பரத்தை இப்போது எங்காவது பார்க்கிறீர்களா? இந்த சட்டத்தை அறிமுகப்படுத்தும் நேரத்தில் இங்கிருந்து டெல்லிக்கு சென்றார். மாநிலங்களவையில் ஒரு இடம் வாங்கிவிட்டார். யாமறியேன் பராபரமே. குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து பா.ம.க.,வின் நிலைப்பாடு பற்றிய கேள்விக்கு அவர் இன்னும் முடிவெடுக்கவில்லை என கூறினார். ஆனால் எதுவும் பேசவில்லை. என்ன நடந்தது என தெரியவில்லை. வழக்கிற்கு பயந்தீர்களா? பதவி வரும் என நினைத்தீர்களா? ஆனால் குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்துள்ளார்.
இப்படிப்பட்ட துரோக கூட்டணியை மத்தியில் ஆளும் சிறுபான்மையினர் விரோத ஆட்சியை மாநிலத்தில் ஆளும் தமிழர் விரோத ஆட்சியை தமிழக மக்கள் அடையாளம் காண வேண்டும்.
இன்றைக்கு நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டத்தின் மூலம் மத்திய - மாநில அரசுகளை எச்சரிக்க விரும்புகிறேன்.
சிறுபான்மையினர் விரோத நடவடிக்கைகளை தமிழர் விரோத செயல்பாடுகளை நீங்கள் நிறுத்திக்கொள்ளாவிட்டால் உங்களுக்கு எதிராக மக்கள் சக்தி திரண்டெழும் என்று எச்சரிக்கிறேன்.
அதிகாரம் கையில் இருக்கிறது, ஆட்சி கையில் இருக்கிறது, பெரும்பான்மை கையில் இருக்கிறது என்பதற்காக நினைத்ததை எல்லாம் செய்ய நினைத்தால் அந்த ஆணவமே உங்களை வீழ்த்தி விடும் என்பதை மறந்துவிடக் கூடாது.
இந்திய நாடு முழுவதும் குடியுரிமை சட்டம் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேற்கு வங்க முதல்வர் எதிர்க்கிறார், கேரள மாநில முதல்வர் நேற்று எதிர்க்கட்சித் தலைவர்களை எல்லாம் ஒருங்கிணைத்த உண்ணாவிரத போராட்டத்தை நடத்துகிறார். மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா அவர்கள் லட்சக்கணக்கானோரை ஒன்று திரட்டி ஒரு பேரணி நடத்தி இருக்கிறார். பஞ்சாப், சத்திஷ்கர் மாநில முதல்வர்கள் கண்டிக்கின்றனர். மத்திய பிரேதேச மாநில முதல்வர் ஏற்றுக் கொள்ள முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். புதுவை மாநில முதல்வர் கூட கிளர்ந்தெழுந்து எச்சரிக்கை மணி அடித்துள்ளார். பீகார் மாநில முதல்வர் ஓட்டு போட்டுள்ளார். ஓட்டு போட்ட பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அவர்கள் பேசியது பத்திரிகையில் வந்துள்ள செய்தி, எங்கள் மாநிலத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லி இருக்கிறார்.
இந்தியாவில் இருக்கும் பல மாநில முதலமைச்சர்களும் எதிர்க்கிறார்கள். பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டிருக்கின்றன. வடமாநிலங்களில் இந்தப் போராட்டம் வன்முறை போராட்டமாக மாறிவருகிறது. நேற்று முன்தினம் இந்த சட்டத்தை நிறைவேற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் ஜார்கண்ட் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு அங்கே ஒரு வார்த்தை சொல்லி இருக்கிறார். இந்த சட்டத் திருத்தத்தை மறுபரிசீலனை செய்யலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்.
அப்படி சொல்பவர்களுக்கு என்னுடைய வேண்டுகோளாக முன்வைப்பது, இந்த சட்டத்தை விமர்சிப்பவர்கள் அனைவரையும் அழைத்து பேசி நடவடிக்கை எடுங்கள். பல மாநிலத்தில் இருந்து முதலமைச்சர்கள், எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்திற்கு சென்று வழக்கு போட்டுள்ளார்கள். தி.மு.க. சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் அவர்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் இதை எதிர்த்து வழக்கு போட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து இதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்று மாலை இந்திய குடியரசுத் தலைவரைச் சந்திக்க நேரம் கிடைத்துள்ளது. இந்தச் சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என பேச இருக்கிறார்கள். நேற்று இரவு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் அவர்கள் என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தி.மு.க. சார்பில் வரவேண்டும் என கோரிக்கை வைத்தார். செல்ல வேண்டும் என கருதினேன். ஆனால் காஞ்சியில் இந்த போராட்டம் நடைபெறுகிறது. எனவே தி.மு.க. சார்பில் நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு வருவார் என சொல்லி தற்போது அவர் சென்றுள்ளார். நம்முடைய குரல் அந்த கூட்டத்தில் ஒலிக்கத்தான் போகிறது. எனவே சிறுபான்மையினரை புறக்கணிக்காதீர்கள். ஈழத்தமிழர்களை வஞ்சிக்காதீர்கள்.
மக்களின் அடிப்படை பிரச்சினையில் அக்கறை செலுத்துங்கள். இந்த தேசத்தின் ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படுத்தாதீர்கள்.
சென்னையில் இருந்து புறப்பட்டு இந்த கூட்டத்திற்கு நிகழ்ச்சிக்கு காரில் வந்து கொண்டிருக்கும் போது நம்முடைய கூட்டணிக் கட்சித் தலைவர்களை செல்பேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது அனைவரிடத்திலும் ஒப்புதல் பெற்று, நாளை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. அந்த கூட்டத்தில் அடுத்தக் கட்ட போராட்டம் என்னவென்று யோசித்து அறிவிக்க இருக்கிறோம். அதற்கு இடம் தரமாட்டார்கள் என நம்புகிறோம்.
எனவே உறுதியோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
ஒரே நாடு என்று சொல்வதற்கான தகுதியை ஒற்றுமை மூலமாகத்தான் ஏற்படுத்த முடியுமே தவிர இப்படி பிரிவினை மூலம் ஏற்படுத்த முடியாது.
வீழ்வது நாமாக இருப்பினும்; வாழ்வது தமிழாக இருக்கட்டும். வணக்கம்.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.