கடந்த 24-ஆம் தேதி, ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று, சென்னை தியாகராயர் நகரில் உள்ள சசிகலா இல்லத்திற்கு, சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா சரத்குமார் ஆகிய இருவரும் சென்றனர். சசிகலாவுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சரத்குமார், "சசிகலாவின் உடல்நிலையை விசாரிப்பதற்காக மரியாதை நிமித்தமாகச் சந்தித்தோம். சசிகலாவுடன் குடும்பம் போல் பழகியதால் நன்றி மறவாமல் சந்தித்தேன். 10 ஆண்டு காலமாக சசிகலாவை எனக்குத் தெரியும். கூடுதல் சீட் தரும் கட்சிகளுடன் கூட்டணி எனக் கூறவில்லை" எனத் தெரிவித்தார்.
அதேபோல, வருகிற 2021- சட்டசபைத் தேர்தலில், அதிக தொகுதிகளில் களமிறங்க திமுக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் தனிச் சின்னத்தில் நிற்பதற்கு விருப்பம் தெரிவித்தன. இந்தச் சூழலில்தான், மூன்றாவது அணி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது
இன்று (26.02.2021) மாலை, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதியை தமிழகத் தேர்தல் நாளாக அறிவித்துள்ளார். தேர்தல் தேதி அறிவித்த சில மணி நேரங்களில், ஐ.ஜே.கே. (இந்திய ஜனநாயகக் கட்சி) -வின் தலைவர் ரவி பச்சமுத்து மற்றும் சமகவின் தலைவர் சரத்குமார் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, "சமக மற்றும் ஐ.ஜே.கே. ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து வருகின்ற சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க இருக்கிறோம். கூட்டணியின் பெயர் குறித்து விரைவில் அறிவிப்போம்" எனத் தெரிவித்தனர்.
இதுகுறித்து, சமக தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவும், தமிழக மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவும், தமிழகத்தை இந்திய அளவில் முதன்மை மாநிலமாக முன்னேற்றுவதற்காகவும் இந்தக் கூட்டணி, மாற்றத்திற்கான முதன்மை அணியாகச் செயல்படும்" எனத் தெரிவித்துள்ளார்.