பிரதமர் நரேந்திரமோடி கூறியதால் தான் அதிமுகவின் இரு அணிகளை இணைக்க ஒப்புக்கொண்டேன் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெவித்துள்ளார்.
தேனியில் நேற்று நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர்,
பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தியதாலேயே அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டேன். அதிமுக அணிகள் இணைப்புக்கு முன் நான் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தேன். தற்போதுள்ள சூழலில் கட்சியை காப்பாற்ற நீங்கள் இணைய வேண்டும் என்று அவர் ஆலோசனை வழங்கினார்.
அணிகள் இணைப்பில் எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்றேன். அதற்கு அவர் நீங்கள் அமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டும் என்றார். என் உடன் இருந்த அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் இதே வேண்டுகோளையே வைத்தனர். அதனால் தான் நான் தற்போது அமைச்சரவையில் உள்ளேன்.
தர்மயுத்தம் தொடங்கும்போது கூறியது ஒரு சதவிகித தகவல் தான், கோபம் வரும்போதெல்லாம் மீதமுள்ள 99 சதவிகித தகவல்களும் வெளிவரும். ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்த காரணத்தால் சசிகலவின் குடும்பத்தினரின் நெருக்கடியை சந்தித்தேன். துரோகி என பட்டம் சூட்டினர். என் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள்.
சசிகலா குடும்பத்தினர் 30 ஆண்டுகளாக கட்சியை மறைமுகமாக இயக்கினர். ஜெயலலிதாவிற்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிக்க வலியுறுத்தினேன். விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதால் ஜெ.,மரணம் பற்றி கருத்து கூற முடியாது என கூறியுள்ளார்.
தர்மயுத்தம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது சசிகலா மீதான கடும் விமர்சனத்தை மீண்டும் முன்வைத்திருப்பதும், அணிகள் இணைப்பின் பின்னணி குறித்து பேசியிருப்பதும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Published on 17/02/2018 | Edited on 17/02/2018