Skip to main content

காதலித்து ஏமாற்றிய இளைஞர்:  காவல்நிலையத்தில் விசம் குடித்த இளம்பெண்

Published on 12/02/2019 | Edited on 12/02/2019
st

 

தமிழகத்தில் உள்ள சாதிகளில் அதிக கட்டுப்பாடுகள் உள்ள சாதிகளில் மிக முக்கியமானது நரிக்குறவர் சாதி. இந்த சாதியில் உள்ள ஒரு இளைஞனோ, இளைஞியோ சமூக வழக்கத்தை மீறி வழித்தவறி போனாலோ, வேற்று சாதியை சார்ந்தவர்களை காதலித்தாலோ, திருமணம் செய்துக்கொண்டாலோ அவர்களை சாதி விலக்கம் செய்துவிடுவார்கள். ஆனால், ஒரே சாதியில் எந்த பெண்ணை விரும்பினாலும் படிப்பு, வசதி என எதையும் பார்க்காமல் திருமணம் செய்து வைத்துவிடுவது அந்த மக்களின் வழக்கம்.

 

அப்படியிருக்க தன் சாதியை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதோடு, தங்களது சமூக பெரியவர்கள் செல்பேச்சை மீறி நடந்துக்கொண்டதால் அந்த சாதி இளம்பெண் ஒருவர் காவல்நிலையம் வந்து புகார் தந்தும் நடவடிக்கை எடுக்கவில்லையென்றதால் காவல்நிலையத்திலேயே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

s

வேலூர் மாவட்டம், இராணிப்பேட்டையை சேர்ந்தவர் நரிக்குறவர் கோவைசரளா. ராணிப்பேட்டையில் ஊருக்கு ஒதுக்குபுறமாக வசித்துவருகிறார்கள்.  இங்கு வசிப்பவர் கோவைசரளா. 18 வயதான இந்த இளம் பெண்ணை கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளான் அதே பகுதியை சேர்ந்த 24 வயதான நரிக்குறவ இளைஞர் பூவரசன். இந்த காதல் இரு குடும்பத்தாருக்கும், அந்த பகுதி மக்களுக்கும் நன்றாக தெரியும். அந்த பெண்ணுக்கு 18 வயதானதும் திருமணம் செய்துக்கொள்ளச்சொல்லி வலியுறுத்தியதும் நான் திருமணம் செய்துக்கொள்ள மாட்டேன் என மறுத்துள்ளான். காரணம் கேட்டபோது, அதையும் கூற மறுத்துள்ளான்.

 

சாதி பஞ்சாயத்து நடந்துள்ளது, அதிலும் அவன் கட்டுப்படவில்லையாம். இதனால் அந்த பெண் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளார். ஆனால், அந்த புகாரை விசாரிக்காமல், அந்த பெண்ணையே மிரட்டிக்கொண்டு இருந்துள்ளனர் மகளிர் காக்கிகள்.  இதனால் என்ன செய்வது எனத்தெரியாமல் நொந்துப்போய் இருந்துள்ளார் அந்த இளம்பெண்.

 

இன்று தான் தந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கேட்டு காவல்நிலையம் சென்றுள்ளார். அங்கு மகளிர் காக்கிகள் மோசமாக பேச, இதில் விரக்தியானவர், கையோடு எடுத்து சென்ற விஷத்தை காவல்நிலைய வாசலிலேயே குடித்துவிட்டார். இதனைப்பார்த்து உடன் வந்திருந்த நரிக்குறவ பெண்கள் சத்தம் போட்டு அழுதபின்னர், வெளியே வந்த ஒருசில காக்கிகள் அங்கிருந்தவர்களிடம் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்யச்சொல்லினர். 

 

போன் செய்தபின் 108 ஆம்புலன்ஸ் வந்ததும் அதில் அந்த இளம்பெண்ணை ஏற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அந்த இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல்நிலையத்துக்கு வந்து நீதி கிடைக்கவில்லையென ஒரு இளம்பெண், விஷம் குடித்த தகவல் அறிந்த ராணிப்பேட்டை டி.எஸ்.பி, எஸ்.பி போன்றோர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர், துணை ஆய்வாளர், எஸ்.பி கான்ஸ்டபிளிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

சார்ந்த செய்திகள்