தமிழகத்தில் 10- வகுப்பு பொதுத்தேர்வும், நிலுவையில் உள்ள 11- ஆம் வகுப்பு தேர்வும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
10- ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு தொடர்பாக உரையாற்றிய முதல்வர் பழனிசாமி, "கரோனா குறுகிய காலத்தில் குறைய வாய்ப்பில்லை என நோய் தொற்று வல்லுநர்கள் கூறியுள்ளனர். தற்போது உள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாணவர் நலன் கருதி, தமிழகத்தில் ஜூன் 15- ஆம் தேதி தொடங்கவிருந்த 10- ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது. மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி 'ஆல் பாஸ்' செய்யப்படுவர். 10- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80% மதிப்பெண் அளிக்கப்படும். எஞ்சிய 20% மதிப்பெண்கள் வருகை அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். நிலுவையில் உள்ள 11- ஆம் வகுப்புத் தேர்வும் ரத்து செய்யப்படுகிறது. சூழலைப் பொறுத்து நிலுவையில் உள்ள 12- ஆம் வகுப்புத் தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்." இவ்வாறு முதல்வர் பேசினார்.
தெலங்கானா மாநிலத்தில் 10- ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வின்றி 'ஆல் பாஸ்' என அம்மாநில அரசு நேற்று (08/06/2020) அறிவித்திருந்த நிலையில், தமிழகத்திலும் 10- ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி ஆல் பாஸ் செய்ய வேண்டும் என தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தமிழக முதல்வர் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.