Skip to main content

சோறு... தண்ணி கேட்கல... நாலு நாளா இருக்கும் மழை நீரை அப்புறப்படுத்துங்க போதும்... பொதுமக்கள் கண்ணீர் (படங்கள்)

Published on 27/11/2020 | Edited on 27/11/2020

 

 

சென்னை கொளத்தூர் தொகுதியின், பாபா நகரில் உள்ள தெருக்களில், கடந்த நான்கு நாட்களாக மழை நீர் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து, அந்த நகரில் உள்ளவர்கள் கூறுகையில், இதுவரை எந்த அதிகாரிகளோ, அரசு ஊழியர்களோ எங்கள் நகருக்கு வரவில்லை. டிவியில் அதிகாரிகள் வருகிறார்கள். ஆளும் கட்சியினர் வருகிறார்கள். எதிர்க்கட்சியினர் வருகிறார்கள் என்று காட்டுகின்றனர். 

 

ஆனால், இந்த 10 தெருக்கள் உள்ள, எங்கள் பாபா நகருக்கு, எந்த ஆளும் கட்சியினரும் வரவில்லை. எதிர்க்கட்சியினரும் வரவில்லை. தரை தளத்தில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்ததால், கடும் சிரமமாக உள்ளது. இதனால், நாலு நாட்களாகச் சமைக்கவில்லை. பிள்ளைகள் பசியில் தவிக்கிறது. கரெண்ட் இல்லாமல் இந்த, 10 தெரு மக்களும் தவிக்கிறோம். 

 

ஃபோன் செய்து தகவல் சொல்லியும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிடவும் இல்லை. தண்ணீரை அப்புறப்படுத்த ஊழியர்களும் வரவில்லை. பக்கத்து நகர்களுக்கு வருகிறார்கள். இங்கு வரவில்லை. பக்கத்து நகரில், தெருவில் அப்புறப்படுத்தும் மழை நீர் எங்கள் பகுதிகளுக்கு வருகிறது. எங்கள் நகர் என்ன பாவப்பட்ட நகரா எனக் கேள்வி எழுப்பினர். 

 

ஒவ்வொரு முறையும் மழை பெய்தால், இதுதான் பிரச்சனை. எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம். தண்ணீரை இதுவரை அகற்றவில்லை. நாங்க சாப்பிட சோறு, தண்ணி கேட்கல, நாலு நாளா தேங்கி நிற்கும் மழை நீரை அப்புறப்படுத்திக் கொடுத்தீங்கன்னா போதும், எனக் கண்ணீருடன் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்