கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை, பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி (15.09.2023) காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர், மாதந்தோறும் ரூ.1000 பெற்றுப் பயன்பெறும் வகையில் தொடங்கி வைத்தார்.
அதே சமயம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், முகாம்களில் விண்ணப்பித்து கள ஆய்வு நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு, புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள 7 இலட்சத்து 35 ஆயிரம் பயனாளிகளுக்கும், ஏற்கனவே, வழங்கப்பட்டு வரும் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுடன் சேர்த்து, மொத்தம் 1 கோடியே 13 இலட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு, நவம்பர் மாதத்திற்கான உதவித் தொகையினை கடந்த 10 ஆம் தேதி (10.11.2023) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களின் மேல் முறையீட்டு விண்ணப்பங்கள் அதிகாரிகளால் பரிசீலிக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், மேல் முறையீட்டு விண்ணப்பங்கள் முழுமையாகப் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு, விண்ணப்பத்தின் நிலை குறித்து 10 நாட்களுக்குள் குறுஞ்செய்தி (SMS) மூலம் உரிய தகவல் தெரிவிக்கப்படும் என அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.