நாடாளுமன்றத்தில் கடந்த நவம்பர் 20ஆம் தேதி முதல் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் வரும் 25ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்தியாவில் அரசியல் சாசனம் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் சிறப்பு விவாதம் நடைபெறுகிறது.
மக்களவையில் நிறைவு விவாதத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியையும், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். நேரு, பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை குறைக்க விரும்பினார் என்றும், இடஒதுக்கீட்டை எதிர்த்து முதலமைச்சர்களுக்கு நேரு நீண்ட கடிதங்கள் எழுதினார் என்றும் குற்றச்சாட்டை முன்வைத்து பேசினார். அதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதிலடி கொடுத்துள்ளார். மாநிலங்களவையில் அரசியலமைப்பு குறித்த விவாதம் நேற்று (16-12-24) தொடங்கியது.
அந்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது, “நேரு மீதான வெறுப்பில், நீங்கள் அரசியல் நிர்ணய சபை, இடைக்கால பாராளுமன்றம், வல்லபாய் படேல் மற்றும் சியாமா பிரசாத் முகர்ஜி ஆகியோரைத் தாக்கினீர்கள். பிரதமர் தனது தவறை ஏற்றுக்கொள்ள வேண்டும். முதல் திருத்தம் தற்காலிக பாராளுமன்றத்தால் செய்யப்பட்டது என்பதையும் அதன் உறுப்பினர்கள் அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்கள் என்பதையும் பிரதமர் மறந்துவிட்டார்.
பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவர்கள் இடஒதுக்கீடு பெறவும், நில சீர்திருத்தங்கள் நடக்கவும், வகுப்புவாத பிரச்சாரத்தை தடுக்கவும் 1951இல் திருத்தம் செய்யப்பட்டது. எனவே, நேரு முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதினார். நேருவை இழிவுபடுத்தும் வகையில் உண்மைகளை திரித்து பேசும், பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இதுவே எனது கோரிக்கை. சர்தார் படேலையும் அவமதிக்கிறீர்கள். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நாட்டிற்கு எதுவும் செய்யாமல் இருந்திருந்தால், நீங்கள் பொறியாளர்களாகவும், மருத்துவர்களாகவும் இந்த சபைக்கு வந்திருக்க மாட்டீர்கள். மோடி பிரதமராகவும், தொழிலாளர் வர்க்க நபராகவும் ஆகியிருக்க மாட்டார். நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்க மாட்டேன்.
இன்று, டிசம்பர் 16, வங்கதேச விடுதலை நாள். நமது துணிச்சலான தலைவர் இந்திரா காந்தி பாகிஸ்தானை இரண்டாக உடைத்து, வங்கதேசம் விடுவிக்கப்பட்டு, ஒரு லட்சம் பாகிஸ்தான் வீரர்களை சிறைபிடித்தார். இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் எவரும் நிம்மதியாக இருக்க முடியாது என்று இரும்புப் பெண்மணி காட்டினார். இவர்கள் குறைந்த பட்சம் அங்குள்ள சிறுபான்மையினரையாவது காப்பாற்ற முயற்சிக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்திற்காக அவர்கள் என்ன செய்தார்கள்? அல்லது நாட்டுக்காக எத்தனை முறை சிறைக்குச் சென்றார்கள்?” என்று பேசினார்.