ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திருடி டிடிவி தினகரன் 18 எம்.எல்.ஏ.க்களும் கொடுத்து வருகிறார் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அதிமுக சார்பில் காவிரி மீட்பு போராட்டம் வெற்றி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் கட்சியை கைப்பற்ற வேண்டும் என எண்ணிய டிடிவி தினகரன் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு பதவி ஆசை காட்டி 18 பேரை தன் பக்கம் தக்கவைத்தார். ஆனால் அதன் மூலம் ஆட்சி அமைக்க முடியவில்லை.
பின்பு மு.க.ஸ்டாலினை முதல்வராக்கி, தான் துணை முதல்வராக ஆகலாம் என திட்டம் தீட்டினர் அதுவம் நிறைவேறவில்லை. இதனால் சபாநயகர் 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்தார். ஆனால் எப்படியாவது இந்த ஆட்சியை கலைத்து விட வேண்டும் என டி.டி.வி. தினகரனும், மு.க.ஸ்டாலினும் துடித்து வருகின்றனர்.
ஜெயலலிதா தன் வியர்வை, ரத்தம், பணம் ஆகியவற்றை கொடுத்து எங்கள் அனைவரையும் எம்.எல்.ஏ. ஆக்கினார். அதே போல்தான் தற்போது டி.டி.வி. தினகரன் அணியில் உள்ள 18 பேரும் எம்.எல்.ஏ.க்களாக ஜெயலலிதா தயவால் உருவாக்கப்பட்டனர்.
ஆனால் அவரது மறைவுக்கு பின் ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை டிடிவி தினகரன் மூலம் 18 எம்.எல்.ஏ.க்களும் பெற்றுக் கொண்டு தற்போது மக்களை ஏமாற்றுகின்றனர் என அவர் கூறினார்.
அமைச்சர் சீனிவாசனின் இந்த பேச்சால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. மேடையில் இருந்தவர்களும் கூட்டத்தில் இருந்தவர்களும் வியப்புடன் அமைச்சரை பார்த்துக் கொண்டிருந்தபோதே அவர் வேறு தலைப்பில் பேச்சைத் தொடங்கினார்.