மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்ய வேண்டும் என்றால் அது பற்றிய முகாம்களில் மக்கள் பங்கேற்று தங்கள் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டுமென வீடியோ பதிவு வெளியிட்டு கேட்டுக்கொண்டுள்ளார்.
அந்த வீடியோவில், ''18 வயதை பூர்த்தி செய்த ஒரு இந்திய இளைஞனுக்கு மிகப் பெரிய கௌரவம் வாக்காளர் என்கிற அடையாளம். அவனுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆயுதம் வாக்காளர் அடையாள அட்டை. கடமையை சரிவர செய்யாத சமூகம், தன்னுடைய உரிமைகளை தன்னால் இழந்துவிடும்.
மாற்றம் வேண்டும், சிஸ்டம் சரியில்லை, எல்லோரும் திருட்டுப்பயலுகன்னு கீ போர்டுல கதகளி ஆடுற பல பேருகிட்ட ஓட்டர் ஐ.டி. கூட இல்ல. எந்த விஷயத்த நாம வேண்டாமுன்னு நினைக்கிறோமோ, எந்த விஷயம் நமக்கு சம்மந்தமில்லன்னு நினைக்கிறோமோ, அந்த விஷயத்தாலத்தான் நமக்கு ஆபத்து வந்து சேரும். இது எல்லாத்துக்கும் இந்திய தேர்தல் ஆணையம் ஒரு பரிகாரம் அறிவித்திருக்கிறது.
நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகள் அல்லது டிசம்பர் 12 மற்றும் 13 தேதிகள் உங்கள் வீட்டு பக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடக்க இருக்கிற சிறப்பு முகாமுக்கு போங்க, வோட்டர் ஐ.டி. தொடர்பான உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
சமீபத்தில் பீகார் தேர்தலில் வெறும் 12 வாக்குகள் வித்தியாசத்தில் ஒருத்தர் தோற்றுள்ளார். முக்கியமாக இல்லத்தரசிகளின் வாக்குகள் அங்கு வெற்றி, தோல்விகளை நிர்ணயித்துள்ளது. நீங்க ஓட்டுப் போடுறது யாரோ ஒருத்தருக்கு இல்லீங்க. நீங்க ஓட்டு போடுறது உங்களுக்காகத்தான். உங்களுக்காக யாரு முடிவெடுக்கணும் என்கிறத நீங்களே தீர்மானிக்கிறதாலத்தான், உங்கள் ஒட்டு உங்களுக்கேதான்.
அதனால 2021 தேர்தலுக்கு நீங்கள் மனசுக்குள்ள சொல்லிக்க வேண்டிய தாரக மந்திரம், I will change, I will vote. மறுபடியும் சொல்றேன். ஆட்சி மாற்றம் என்கிறது வெறும் அரசியல் மாற்றம், அதிகாரம் மாற்றம், நிர்வாக மாற்றம் மட்டுமல்ல. எல்லாரும் முடிவெடுக்கிற அன்னைக்கு கூடினால் அதுவே பெரிய சமூக மாற்றம்'' என குறிப்பிட்டுள்ளார்.