ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்புப் படையினரின் அதிரடித் தேடுதல் வேட்டையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி ரியாஸ் நய்கூ சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், காஷ்மீரில் இணையச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர் பகுதியில் கடந்த சில நாட்களாகப் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், ரியாஸ் நய்கூவை இந்தியப் படையினர் சுற்றி வளைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு ரியாஸ் நய்கூ புல்வாமாவின் பைக்போரா கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்ததாகத் தகவல் வெளியான நிலையில், துரிதமாகச் செயல்பட்ட ராஷ்டிரிய ரைபிள்ஸ் (ஆர்.ஆர்), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) மற்றும் உள்ளூர் காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழு ஆகியோர் அந்தக் கிராமத்தின் அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகளுக்கும் சீல் வைத்தனர்.
மேலும், ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தைச் சேர்ந்த மற்றொரு தீவிரவாதி ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவந்திபோராவின் ஷர்ஷாலி க்ரூ பகுதியில் நடத்த ஒரு மோதலில் மற்றொரு தீவிரவாதி கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தவறான செய்திகள் பரவி பதட்டத்தை ஏற்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் காஷ்மீர் பகுதியில் இணையச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி ரியாஸ் நய்கூ தலைக்கு ரூ.12 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.