![](http://image.nakkheeran.in/cdn/farfuture/dU8LRg3xrQ5rVds7omg6mcoMt25vJU1EXJM2TNxmVkA/1600777594/sites/default/files/styles/home_page_arasiyal_gallery_left_slider_540x262/public/2018-02-21/Tamilisai%20Soundararajan%20kamal%20991.jpg?itok=rI5ZFm1q)
தேசியக் கட்சியின் மாநிலத் தலைவரான நான், எப்படி கமல்ஹாசன் கட்சியில் சேர அப்ளை செய்வேன்? என பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரோடு மாவட்ட பா.ஜ.க பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றுது. அதில் கலந்து கொண்ட பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் முன்னதாக செய்தியாளர்களிடம் பேசினார்,
"இன்றையச் சூழலில் நாகரீகமான அரசியலை, வளர்ச்சி அரசியலை, ஊழலற்ற அரசியலை கொடுக்கும் தகுதியை பா.ஜ.க. பெற்றுள்ளது. புதியவர்கள் அரசியலுக்கு வருவதாகக் கூறுகின்றனர். ஆனால், வருவார்களா எனத் தெரியவில்லை. இவர்களால் மக்களுக்கு எதையும் செய்ய முடியாது.
டி.டி.வி. தினகரன் தமிழகம் தலைநிமிர, புதிய கட்சி துவங்கப்போவதாக அறிவித்துள்ளார். சிறையில் இருப்பவர்களின் படத்தை போட்டுவிட்டு, இவர்கள் எப்படி தமிழகத்தை தலை நிமிர வைப்பார்கள் எனத் தெரியவில்லை. தமிழகத்தை தலைநிமிர வைக்க கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
கமல்ஹாசன் கட்சியில் இருந்து என்னை உறுப்பினராக சேர்த்துக் கொண்டுள்ளோம் என எனக்கு தகவல் வருகிறது. இது எப்படி என தெரியவில்லை. நான் அதில் அப்ளை செய்ததாகக் கூறுகின்றனர். தேசியக் கட்சியின் மாநிலத் தலைவரான நான், எப்படி அதில் அப்ளை செய்வேன்? அவர்கள் தவறு செய்து விட்டார்கள். அதை ஒப்புக் கொள்ள மறுக்கின்றனர். ஏமாற்று வேலை செய்யக்கூடாது. நாகரீகமற்ற அரசியல் தேவையில்லை. நாங்கள் நேர்மையான அரசியல் நடத்துகிறோம்.
நோட்டு கொடுத்து ஓட்டு வாங்குபவர்களை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். தேனி, குரங்கணி காட்டுத் தீ சம்பவம் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மலையேற்றத்தை தமிழக அரசு வரைமுறைப்படுத்த வேண்டும். பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டும். பாஜகவுக்கு எதிராக சோனியா, 20 கட்சிகளின் கூட்டத்தை கூட்டியுள்ளார். இனி எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும், பாஜகவின் உறுதித் தன்மையை குலைக்கமுடியாது.
காங்., பாஜக, அல்லாத கூட்டணிக்காக ஸ்டாலினிடம் மம்தா பேசுகிறார். காங்கிரஸ் கூட்டிய கூட்டத்தில் கனிமொழி கலந்து கொள்கிறார். உண்மையில் காங்கிரஸ் கூட்டணியில் திமுக உள்ளதா? என்பதை தெரியப்படுத்த வேண்டும் காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி விட்டது" என்றார்.