Skip to main content

’’மாணவிகள் தற்கொலையில் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்’’ - நீதிபதி கிருபாகரன் காட்டம்

Published on 12/06/2018 | Edited on 12/06/2018

 

kirupakaran


நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவிகள் அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ தற்கொலை செய்துகொண்டது குறித்து நீதிபதி கிருபாகரன், கடும் கண்டனங்களை தெரிவித்தார்.    அவர், ’’மாணவர்கள் தற்கொலை சம்பவங்களுக்கு அரசை மட்டும் குறை சொல்லக்கூடாது.   சமூகத்தில் இருக்கும் அனைவருமே பொறுப்பேற்க வேண்டும். மாணவர்களின் தற்கொலை சம்பவங்களை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்.  முன்கூட்டியே அறிவுரை வழங்காமல் இறந்த பிறகு கண்ணீர் வடிப்பது தேவையற்றது’’ என்று கருத்து தெரிவித்தார்.   வழக்கறிஞர் சூரியபிரகாசம் தொடந்த வழக்கில் அவர் இவ்வாறு கூறினார்.

 

அவர் மேலும்,  மாணவர்கள் தற்கொலைகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?  என்று அரசுக்கு கேள்வி எழுப்பினார்.    மாணவிகளின் தற்கொலைகள் குறித்து இரண்டு வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.  மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குவது குறித்தும் அரசு பதிலளிக்க உத்தரவிட்டார்.   தலைமை ஆசிரியர்களை கொண்டு கவுன்சிலிங் அளிப்பது குறித்து பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.  மேலும், வழக்கு விசாரணையை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 


 நீட் தேர்வு தோல்வியால் கடந்த ஆண்டு அரியலூரை சேர்ந்த அனிதா தற்கொலை செய்து கொண்டார். அந்த சமயத்தில் மருத்துவப் படிப்பில் இடம் கோருவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருத்திகா என்பவர்  வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ’’நீட் தேர்வு தோல்வியால் ஏற்படும் மரணங்களை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வுக்கு முன்பாக உரிய கவுன்சிலிங் மற்றும் பயிற்சிகள் அளிக்க வேண்டும். தேர்வு பயத்தை போக்கி சிபிஎஸ்இ தேர்வு வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் நடத்தும் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார். 

 

இந்நிலையில் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் சிறப்பான மதிப்பெண்களை எடுத்த விழுப்புரத்தை சேர்ந்த பிரதீபாவும், திருச்சியை சேர்ந்த சுபஸ்ரீயும் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டனர்.  இந்நிலையில், வழக்கறிஞர் சூரியப்பிரகாசம்,   நீதிபதிகள் கிருபாகரன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில்  ஆஜராகி, மாணவர்களுக்கு கவுன்சிலிங்க் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல உத்தரவுகளை இந்த நீதிமன்றம் கடந்த ஆண்டு தமிழக அரசுக்கு பிறப்பித்தது. ஆனால், தமிழக அரசு இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை. இதனால், இந்த ஆண்டும் உயிரிழப்புகள் தொடர்கின்றன. எனவே, தமிழக அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க  வேண்டுமென்று கோரிக்கை வைத்தார். இதனையேற்ற நீதிபதி கிருபாகரன், மனுவாக தாக்கல் செய்யுங்கள் வரும் செவ்வாய் கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உத்தரவிட்டார்.  அதன்படி இன்று மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவாக தாக்கல் செய்தார்.  இந்த மனு மீதான விசாரணையில், நீதிபதி கிருபாகரன் மேற்கண்டவாறு கண்டனங்களையும், உத்தரவுகளையும் பிறப்பித்தார். 

சார்ந்த செய்திகள்