Skip to main content

எட்டு இந்தியர்களுக்கு மரண தண்டனை விவகாரம்; கத்தார் நீதிமன்றத்தில் மேல்முறையீடு

Published on 10/11/2023 | Edited on 10/11/2023

 

eight Indian officer sentenced in qatar and appeal at court

 

கடந்த வருடம் புதிய நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்கும் திட்டத்தை கத்தார் நாடு செயல்படுத்தி இருந்தது. அங்கு தயாரிக்கப்பட இருக்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஜெர்மன் நாட்டின் தொழில்நுட்பத்துடன் சேர்த்து வடிவமைக்கப்பட்டு கத்தார் நாட்டின் கப்பல் படைக்காக உருவாக்கப்பட இருந்தது. இந்த வடிவமைப்புப் பணிகளில் ஈடுபட்ட நிறுவனங்களில் ஒன்று 'அல்தாரா'.  இந்த நிறுவனம் இந்தியக் கடற்படையைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் 75 பேரை பணியில் அமர்த்தியிருந்தது. 

 

இந்த 75 பேரில் முன்னாள் இந்திய வீரர்கள் 8 பேர் இஸ்ரேல் நாட்டுக்காக உளவு பார்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் அந்த 8 பேரையும் கடந்த ஆண்டு கத்தார் உளவுத்துறை கைது செய்தது. அவர்கள் மீதான வழக்கு விசாரணை கத்தார் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு கடந்த அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி வெளியானது. அதில் அந்த முன்னாள் இந்திய வீரர்கள் 8 பேருக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது கத்தார் நீதிமன்றம். 

 

இந்த தீர்ப்பிற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "கத்தாரில் எட்டு கடற்படை முன்னாள் அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தீர்ப்பின் முழு விவரங்கள் வெளி வருவதற்காக காத்திருக்கிறோம். எட்டு பேரின் குடும்பத்தினரோடும், சட்ட வல்லுநர்களுடனும் தொடர்பில் உள்ளோம். குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்றுள்ள இந்தியர்கள் 8 பேரைக் காக்கத் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் ஆய்வு செய்து வருகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

 

இந்த நிலையில், முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை வழங்கியதை எதிர்த்து கத்தார் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியதாவது, “தோகாவில் உள்ள இந்தியத் தூதரகம், கடற்படை வீரர்களுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து கத்தார் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மேலும், அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்